மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக இஸ்லாமியர் ஒருவர் அமைச்சராக பதவியேற்றுள்ளார். ஆஸ்திரேலியாவில் பிரதமராக இருந்த ஜூலியா கில்லார்ட்டுக்கு கட்சியில் செல்வாக்கு குறைந்ததை தொடர்ந்து, புதிய பிரதமராக கெவின் ருத், கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவியேற்றார்.
அவரது அமைச்சரவை நேற்று முன்தினம் இரவு விரிவாக்கம் செய்யப்பட்டது. இஸ்லாமியரான ஈத் ஹியூசிக்(43, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். பிராட்பேண்ட் துறைக்கும் இவர் பொறுப்பு வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போஸ்னியாவில் இருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறிய பெற்றோர்களுக்கு பிறந்தவர் ஹியூசிக். இஸ்லாத்தை சேர்ந்த ஒருவர், ஆஸ்திரேலியாவில் அமைச்சராக பொறுப்பேற்பது இதுவே முதல் முறை.
இந்த பெருமையை பெற்ற ஈத் ஹியூசிக், குர்ஆனை கையில் வைத்துக் கொண்டு பதவிப்பிரமாணம் ஏற்றார். இதை சமூக இணையதளங்களில் ஏராளமானோர் விமர்சித்துள்ளனர். ஆனால், இதை பற்றி எல்லாம் கவலைப்பட போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘இஸ்லாமியரான நான் நேர்மையான முறையில் பதவியேற்றேன். நான் வேற்று மதத்தினரின் புனித நூலை கையில் வைத்துக் கொண்டு பதவிப்பிரமாணம் எடுக்கவில்லை. என்னுடைய சமூக இணையதளத்தில் விமர்சனம் செய்பவர்களின் நடவடிக்கை, ஜனநாயகத்தில் ஒரு பகுதிதான்’’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக