சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை
நிர்வகிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். உணவுப் பொருள் வழங்கல்
மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளராக உள்ள ஷிவ்தாஸ் மீனா,
நிர்வாக அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஓராண்டு காலம் அல்லது தேவைப்படும் காலம் வரையில் அவர் அந்தப் பொறுப்பை
வகிப்பார் எனவும், தாற்காலிகமாக இந்தப் பதவி உருவாக்கப்பட்டுள்ளதாகவும்
தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை
பிறப்பித்தார். அதே சமயம், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர்
பாதுகாப்புத் துறை ஆணையாளர் பொறுப்புக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.
புதிய அதிகாரிக்கு முழு அதிகாரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக
அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஷிவ்தாஸ் மீனாவுக்கு, பல்கலைக்கழகத்தை
நிர்வகிக்க முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நிதி உள்பட எத்தகைய முடிவுகளையும் துணைவேந்தரோ அல்லது
பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய உயர் அதிகாரிகள் குழுவோ எடுக்க முடியாது.
அரசு நியமித்துள்ள நிர்வாக அதிகாரியான ஷிவ்தாஸ் மீனாதான் அனைத்து
முடிவுகளையும் எடுக்க முடியும்.
பல்கலைக்கழகத்தில் எழுந்துள்ள நிதிச் சிக்கல் உள்ளிட்ட அனைத்துப்
பிரச்னைகளையும் தீர்க்கும் வரை தாற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ள நிர்வாக
அதிகாரி பொறுப்பில் ஷிவ்தாஸ் மீனா தொடர்வார் எனத் தலைமைச் செயலக அதிகாரிகள்
தெரிவித்தனர்.
பொறுப்பேற்பு: இதைத் தொடர்ந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷிவ்தாஸ்மீனா
வியாழக்கிழமை மாலை அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில்
பொறுப்பேற்றார். அப்போது மாவட்ட ஆட்சியர் ஆர்.கிரிலோஷ்குமார், துணைவேந்தர்
டாக்டர் எம்.ராமநாதன், பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, உதவி ஆட்சியர்
எல்.சுப்பிரமணியன், வட்டாட்சியர் எம்.விஜயா ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக