வெள்ளி, ஏப்ரல் 05, 2013

19 ஆயிரத்து 500 மனைகளுடன் மதுரை அருகே துணை நகரம்: ஜெயலலிதா !

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ரூ.918 கோடியில் 2,792 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
மதுரைக்கு அருகே துணை நகரம் அமைக்கப்படும் என்றும், அந்த துணை நகரத்தில் 19 ஆயிரத்து 500 மனைகள் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் வியாழக்கிழமை படித்தளித்த அறிக்கை:
மதுரையில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் விமான நிலையத்துக்கு அருகில் மதுரை-திருநெல்வேலி நான்கு வழிப் பாதையில் தோப்பூர் மற்றும் உச்சப்பட்டி கிராமங்களில் வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான 586.86 ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த துணை நகரம் அமைக்கப்படும்.

இந்த நகரத்தில் மொத்தம் 19 ஆயிரத்து 500 மனைகள் உருவாக்கப்படும். அதில், 14 ஆயிரத்து 300 மனைகள் குறைந்த வருவாய் பிரிவினருக்கும், 2 ஆயிரத்து 500 மனைகள் மத்திய வருவாய் பிரிவினருக்கும், 750 மனைகள் உயர் வருவாய் பிரிவினருக்கும், ஆயிரத்து 950 மனைகள் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்படும்.

ரூ.120 கோடியில் அடிப்படை வசதிகள்: இந்த புதிய துணை நகரத்தில் அடிப்படை வசதிகளான சாலைகள், குடிநீர் வசதி, கழிவுநீர் வடிகால் வசதி, தெரு விளக்குகள், மழை நீர் சேகரிப்புத் திட்டம் மற்றும் பூங்காக்கள் ஆகியன ரூ.120 கோடியில் அமைக்கப்படும். மேலும், அங்கு குடியேறும் மக்களின் நலனுக்காக பள்ளி வளாகம், வணிக மனைகள், காவல் நிலையம் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்படும். இந்த துணை நகரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிதியில் இருந்து செயல்படுத்தப்படும்.
      
ஒன்பது மாவட்டங்களில் குடியிருப்புகள்: சென்னை, காஞ்சிபுரம், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், விருதுநகர், திண்டுக்கல் மற்றும் திருச்சி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான நிலத்தில் ஆயிரத்து 630 தனி வீடுகள் மற்றும் 2 ஆயிரத்து 792 அடுக்குமாடி குடியிருப்புகள் சுமார் ரூ.918.45 கோடி மதிப்பில் சுயநிதி திட்டத்தின் கீழ் கட்டப்படும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

மாவட்ட வாரியாக குடியிருப்புகள் விவரம்

ஒன்பது மாவட்டங்களில் கட்டப்படவுள்ள குடியிருப்புகள் குறித்து சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு:

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏழு இடங்களில் 13.80 ஏக்கரில் ரூ.371 கோடியில் 844 அடுக்குமாடி குடியிருப்புகள்.
காஞ்சிபுரத்தில் 2 இடங்களில் 22.7 ஏக்கரில் ரூ.303.80 கோடியில் 1,500 குடியிருப்புகள்.
கோவையில் 2 இடங்களில் 3.90 ஏக்கரில் ரூ.50.16 கோடியில் 344 குடியிருப்புகள்.
ஈரோட்டில் 2 இடங்களில் 12.15 ஏக்கரில் ரூ.59.27 கோடியில் 468 குடியிருப்புகள்.

சேலத்தில் 36.20 ஏக்கரில் ரூ.13.27 கோடியில் 120 வீடுகள்.
கிருஷ்ணகிரியில் 10.50 ஏக்கரில் ரூ.19.20 கோடியில் 258 குடியிருப்புகள்.
விருதுநகரில் 3 இடங்களில் 32.50 ஏக்கரில் ரூ.73.10 கோடியில் 722 குடியிருப்புகள்.
திண்டுக்கல்லில் 2 இடங்களில் ஒரு ஏக்கரில் ரூ.2 கோடியில் 35 வீடுகள்.
திருச்சியில் 2 இடங்களில் 3.09 ஏக்கரில் 104 குடியிருப்புகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக