வாஷிங்டன்:இறைத்தூதரையும், இஸ்லாத்தையும் அவமதித்து அமெரிக்கா வாழ் யூதனால் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தால் முஸ்லிம் உலகில் கொந்தளிப்பு தீவிரமடைந்துள்ளது. லிபியாவில் கோபமடைந்த முஸ்லிம்கள் அமெரிக்க தூதரகத்திற்கு தீவைத்த சம்பவம் 2 தினங்கள் முன்னால் நிகழ்ந்தது. இச்சம்பவத்தில் அமெரிக்க தூதர் உள்பட நான்குபேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் கொந்தளிப்பு அடங்காத லிபியாவை நோக்கி அமெரிக்க கடற்படையின் ஏவுகணைகளை ஏந்திய போர் கப்பல்கள்
லிபியாவின் பெரிய நகரமான பெங்காசிக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் கடற்படையின் ஒரு பிரிவும் அனுப்பப்பட்டுள்ளது. லிபியாவில் உள்ள தூதரக அலுவலகங்களுக்கு பாதுகாப்பை அதிகரிப்பதற்காகவே இந்நடவடிக்கை என்று ஒபாமா அரசின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். ஐரோப்பா கடற்படை தளத்தில் இருந்து 50 உறுப்பினர்கள் அடங்கிய கடற்படை குழு ஒன்று லிபியாவுக்கு சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார். யு.எஸ்.எஸ் லபூன், யு.எஸ்.எஸ் மெக்ஃபால் ஆகிய போர்க்கப்பல்கள் லிபியாவை நோக்கி விரைந்துள்ளன. இந்த போர்க் கப்பல்களில் டெமொஹாக் ஏவுகணைகள் நிரம்பியுள்ளன. அமெரிக்க தூதரகத்தை தாக்கியவர்கள் மீது தாக்குதல் நடத்த ஒபாமா அரசு உத்தரவிட்டால் இந்த போர்க் கப்பல்கள் பயன்படுத்தப்படும் என கருதப்படுகிறது.
போர்க் கப்பல்கள் ஒவ்வொன்றிலும் 300 வீரர்கள் உள்ளனர். அமெரிக்க குடிமக்களுக்கு பாதுகாப்புக்கு தேவையான ஆதரவை அளிக்குமாறு ஒபாமா உத்தரவிட்ட சில மணிநேரங்களிலேயே போர்க்கப்பல்கள் லிபியாவை நோக்கி விரைந்துள்ளன. உலகம் முழுவதும் உள்ள தூதரக அலுவலகங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க ஒபாமா உத்தரவிட்டுள்ளார். போர்க் கப்பல்களை அனுப்பியதுக் குறித்து பதிலளிக்க பெண்டகன் செய்தித் தொடர்பாளர் ஜார்ஜ் லிட்டில் மறுத்துவிட்டார். ஆனால், அமெரிக்க படை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
அமெரிக்க தூதரகங்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து லிபியா மற்றும் எகிப்து அதிபர்களுடன் ஒபாமா தொலைபேசியில் பேசினார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் தூதர் மற்றும் மூன்று அமெரிக்க தூதரக அதிகாரிகளின் மரணம் தொடர்பான விசாரணைக் குறித்தும் அவர் வினவினார்.
இதனிடையே லிபியாவின் பெங்காசி அமெரிக்க தூதரகத்தில் நடந்த தீவைப்புச் சம்பவத்தில் பலியான அமெரிக்க தூதர் ஸ்டீவன்ஸின் பாதுகாவலர் பாதியிலேயே விட்டுச் சென்றதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே, ஸ்டீவன்ஸ் புகை காரணமாக மூச்சுத் திணறி உயிரிழந்தாரா அல்லது வேறு காரணங்களால் உயிரிழந்தாரா என்பது பற்றி உடல்கூறு ஆய்வறிக்கையில் தெரியவரும் கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக