கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்புவதை உடனே நிறுத்த வலியுறுத்தி இடிந்தகரை உள்ளிட்ட கிராம மீனவர்கள் நேற்று கடலில் நின்று போராட்டம் நடத்தியபோது, கடற்படை ஹெலிகாப்டர் போராட்டக்காரர்களை அச்சுறுத்துவது போல தாழ்வாகப் பறந்ததால் பீதியடைந்த 5 போராட்டக்காரர்கள் நிலை தடுமாறி கடலில் விழுந்தனர். அதில் ஒருவர் பலியானார். மத்திய பிரதேசத்தில் அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க 15 நாட்களாக கழுத்தளவு நீரில் நின்று விவசாயிகள் நடத்திய போராட்ட முறை இப்பொழுது கூடங்குளத்தில் எதிரொலித்து வருகிறது. நேற்று முதல்
இடிந்தகரையில் ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக கிராம மக்கள் கடலில் நின்றபடி போராடி வருகின்றனர். இன்று 2வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது.
நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் அவ்வப்போது படு தாழ்வாகப் பறந்து கொண்டிருந்தது. இது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மிரட்டும் தொனியில் இருந்தது. மத்தியப் பிரதேசத்தில் நடந்த போராட்டத்தின்போது கூட இப்படி நடந்து கொள்ளவில்லை மத்திய பாதுகாப்புப் படை. ஆனால் நேற்று நடந்ததைப் பார்த்த பொதுமக்கள், இது சிங்களப் படையினர், ஈழத் தமிழர்கள் மீது ஏவிய அடக்குமுறையை நினைவூட்டுவதாக உள்ளதாக குமுறல் வெளியிட்டனர்.
இந்த நிலையில் இந்தியக் கடலோரக் காவல் படையின் அச்சுறுத்தலால் ஒரு அப்பாவி போராட்டக்காரர் உயிரிழந்துள்ள செய்தி தற்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மக்கள் பலரும் இப்போராத்தில் கலந்து கொண்ட போது சிலர் தூண்டில் பாலத்தில் நின்றபடி போராட்டத்தை பார்த்தனர். அப்போது பல முறை கடலோரக் காவல்படை ஹெலிகாப்டர் மிகத் தாழ்வாக பறந்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தி குழந்தைகைகளை பயமுறுத்தியது. விமானம் மிகமிக தாழ்வாக பறக்கும் போது பாலத்தில் இருந்து கைக்கு எட்டும் தூரத்தில் விமானம் இருந்ததாக மக்கள் தெரிவித்தனர்.
அந்த சமயத்தில் தான் பாலத்தில் இருந்து சகாயராஜ் என்பவர் உள்ளிட்ட 5 பேர் கீழே விழுந்துள்ளனர். அதில் சகாயராஜ் தலையில் படுகாயமடைந்தது. இதையடுத்து 5 பேரையும் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சகாயராஜ் உயிரிழந்தார். அவருக்குத் திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர்.
இந்த செய்தியை கேட்ட தமிழர்கள் மிகவும் கொதித்து போயுள்ளனர். காரணம், இதுவரை 550 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்களக் கப்பல் படையால் கொல்லபட்ட போது பாதுகாப்புக்கு வராத இந்திய கடலோர காவல் படை , இப்போது தங்கள் வாழ்வாதாரத்திற்கு போராட்டும் மக்களை குறிவைத்து வானில் பல நூறுமுறை பறந்து செல்கிறது. எவ்வளவு முறையிட்டும் இந்திய அரசு மக்களை காக்க இது போல விமானம் மூலம் கண்காணிக்கவில்லை . இன்று மட்டும் ஏன் இந்த விமானம் பலமுறை சுற்றிச் சுற்றி வட்டமிட்டது என்ற கேள்வியை எழுப்புகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக