மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகனுக்குச் சொந்தமான ஒலிம்பஸ் கிரானைட் குவாரியின் லைசென்ஸை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.மதுரை மாவட்டம் மேலூர்-கீழவளவு பகுதியில் இயங்கி வந்த சுமார் 89 கிரானைட் குவாரிகள் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததில் பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தலைமையில் அதிகாரிகள் குழு தீவிர சோதனை
நடத்தி, முறைகேடுகளுக்கு தலைமை வகித்த பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்துக்கு சீல் வைத்தனர். அதன் மீது 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பி.ஆர்.பழனிச்சாமி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதே போல மதுரா கிரானைட் அதிபர் பன்னீர் முகமது மற்றும் கிரானைட் முறைகேடுகளுக்கு உதவிய முன்னாள் அதிகாரிகள் உள்பட 40 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிரானைட் அதிபர்கள், பிஆர்பியின் மகன்கள் உள்பட 15 பேர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். இதில் முதன்மையானவர் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி.
இவரும் திமுக பிரமுகர் சூடம்மணியின் மகன் நாகராஜனும் பங்குதாரராக இருந்த ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனமும் பெரும் மோசடிகளை செய்துள்ளது.
கீழவளவை அடுத்த அம்மன் கோவில்பட்டி பகுதியில் 3 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள ஒலிம்பஸ் குவாரி, கடந்த 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை சர்க்கரை பீர் மலை என்னும் பொக்கிஷ மலைப் பகுதிகளில் கிரானைட் கற்களை வெட்டி அரசு கனிம நிறுவனத்திற்கு கொடுக்கும் ஏஜெண்டாக செயல்பட்டது.
இந்த நிறுவனம் சட்டவிரோதமாக பல கோடி மதிப்புள்ள கிரானைட் கற்களை வெட்டி எடுத்து விற்றுள்ளது.
மேலும் கிரானைட் குவாரிகளில் சட்டவிரோத வெடிகுண்டுகளையும் பயன்படுத்தி, பாறைகளை வெட்டி எடுத்துள்ளது துரைதயாநிதியின் இந்த நிறுவனம்.
மேலும் கிரானைட் குவாரிகளில் சட்டவிரோத வெடிகுண்டுகளையும் பயன்படுத்தி, பாறைகளை வெட்டி எடுத்துள்ளது துரைதயாநிதியின் இந்த நிறுவனம்.
இந்த விவகாரத்தில் ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் திமுக பிரமுகர் சண்முகம், அதிமுக பிரமுகர் கனகு, நிறுவன மேலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
ஆனால், துரை தயாநிதி தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.
இந் நிலையில் துரை தயாநிதி பங்குதாரராக இருந்த ஒலிம்பஸ் கிரானைட் குவாரியின் உரிமத்தை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்த 50க்கும் மேற்பட்ட குவாரிகளின் லைசென்சுகளை ரத்து செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
இது தொடர்பாக மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில், ஒலிம்பஸ் கிரானைட் குவாரியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தொடர்புடைய பங்குதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்களோ அவர்கள் சார்பாகவோ யாரும் கிரானைட் முறைகேடு தொடர்பாக எந்தவித விளக்கத்தையும் தரவில்லை.
இந் நிலையில் தமிழக அரசு ஒலிம்பஸ் கிரானைட் குவாரியின் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது என்றார்.
முன் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு:
இந் நிலையில் தன்னை போலீசார் கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் துரைதயாநிதி தாக்கல் செய்துள்ள மனு மீது இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தற்போது அளில்லா விமானம் மூலம் கிரானைட் கற்களை அளவிடும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முழுமையாக முடிந்தால்தான் அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பதை கூற முடியும். இந்த பணி விரைவில் முடிந்து விடும். அதுவரை இந்த வழக்கு விசாரணைக்கு கொஞ்சம் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று அரசு தலைமை வழக்கறிஞர் கூறினார்.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி மதிவாணன், வழக்கு விசாரணையை செப்டம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக