ரியாத்:சவூதி அரேபியா உயர் தூதரக பிரதிநிதியாக பதவியேற்கும் முதல் பெண்மணி என்ற பெருமையை மோதி அல் கலஃப் பெற்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள சவூதி அரேபியா தூதரகத்தில் சமூக-கலாச்சாரத்துறை துணை அலுவல் அதிகாரியாக மோதி அல் கலஃப் நியமிக்கப்பட்டுள்ளார். சமூக-கலாச்சாரத்துறை அதிகாரி முஹம்மது அல் ஈஸா நேற்று மோதி அல் கலஃபின் நியமனம் குறித்த அறிக்கையை
வெளியிட்டார். மோதியின் நியமனம் சவூதி அரேபிய பெண்களுக்கு பெருமையை சேர்த்துள்ளது. தூதரக துறையில் கலஃபின் திறமையை கண்டு அவரை தனது உதவியாளராக நியமித்ததாக ஈஸா கூறினார். தனது பதவி நியமனம் குறித்து அமெரிக்காவின் வெர்ஜீனியாவில் உள்ள தனது வீட்டில் இருந்து தொலைபேசி மூலமாக அல் அரேபியா சானலுக்கு அளித்த பேட்டியில், மோதி அல் கலஃப் மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்தார். கலஃபை தவிர 13 சவூதி பெண்கள் அமெரிக்காவில் உள்ள தூதரகத்தில் பணியாற்றுகின்றனர்.
2008-ஆம் ஆண்டு முதல் சவூதி தூதரகத்தில் சமூக-கலாச்சார துறை இயக்குநராக கலஃப் சேவையாற்றி வருகிறார். ரியாதில் உள்ள பிரின்ஸஸ் நோரா பல்கலைக்கழகத்தில் இருந்து மொழி விஞ்ஞானத்தில் பி.ஹெச்.டி முனைவர் பட்டம் பெற்றுள்ள கலஃப், சவூதி பெண்களின் உரிமைப் போராட்டத்தில் முன்னணி போராளி ஆவார். 2003-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை அரப் நியூஸ் என்ற ஆங்கில பத்திரிகையில் கட்டுரையாளராக பணியாற்றினார். கடந்த2009-ஆம் ஆண்டு கல்வி துணை அமைச்சராக பதவியேற்ற நோரா அல் ஃபாஇஸா என்பவர்தாம் சவூதி அரேபியாவில் உயர் பதவியில் நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக