திங்கள், செப்டம்பர் 10, 2012

வந்தேறிகளான தாக்கரேக்கள் வெளியேற வேண்டும் : லாலு !

பால் தாக்கரே, உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் பீகாரைச் சார்ந்தவர்கள். அவர்கள் மகாராஷ்டிராவின் வந்தேறிகள். அவர்கள் உடனே அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று ராஷ்டிரீய ஜனதா தள் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
பீகாரி வந்தேறிகள் என்று ராஜ் தாக்கரே கூறியது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த லாலு பிரசாத், தாக்கரே குடும்பம் பீகார் மாநிலத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். தற்போது அவர்கள் மகாராஷ்டிராவில் வசித்து வருகின்றனர். அவர்கள் மும்பையின்
வந்தேறிகள் ஆவர். எனவே, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அவர்கள் மகாராஷ்டிராவைவிட்டு வெளியேற வேண்டும் என்று லாலு கூறினார்.
இந்தியா இந்தியர்கள்  அனைவருக்கும் சொந்தமானதாகும். அவர்கள் மும்பை, டெல்லி, சென்னை அல்லது பெங்களூர் என இந்தியா முழுவதும் சென்று தங்குவதற்கோ அல்லது வேலை செய்வதற்கோ உரிமை பெற்றவர்கள் என்றும் லாலு கூறினார்.
மகாராஷ்டிர மாநிலத்தைக் கட்டியெழுப்புவதற்காக பீகாரிகள் தங்கள் கடுமையான உழைப்பை வழங்கியுள்ளனர். அம்மாநிலத்தின் நலனுக்கு அவர்கள் எப்பொழுதும் கேடு விளைவித்ததில்லை. அவர்கள் அங்கே தங்கியிருக்க முழு உரிமை பெற்றிருக்கிறார்கள்  என்றும் அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், தாக்கரே குடும்பத்தினர் பீகார் மாநிலத்தின் மகத் பகுதியைச் சார்ந்தவர்கள் என ராஜ் தாக்கரேயின் தாத்தா பிரபோதங்கர் தாக்கரே எழுதியுள்ள நூலைச் சுட்டிக்காட்டி கடந்த வாரம் தகவல் வெளியிட்டமை குறிப்பிடத் தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக