தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் "டுவிட்டர்' இணையதளத்தை தடை செய்வது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.தேவையற்ற வதந்திகளைப் பரப்பி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் நிகழ்வுகளைத் தடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதன்படி தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், அசாம், மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் டுவிட்டர் இணையதளத்தை முடக்க மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இந்தப் பணியை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து கணினித் துறை நிபுணர்களுடன் தீவிர
ஆலோசனை நடைபெற்று வருகிறது. தகவல் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளதோ, அதே அளவுக்கு அவற்றால் பிரச்னைகளும் அதிகரித்துள்ளன.
சமீபத்தில் தமிழகம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக செல்போன், இணையதளங்கள் மூலம் வதந்தி பரவியது. இதனால் வடகிழக்கு மாநிலத்தவர் பலர் ஒட்டுமொத்தமாக தங்கள் சொந்த ஊர் திரும்பினர். இதுபோன்ற சம்பவங்கள் நாட்டு மக்களிடையே கசப்புணர்வை ஏற்படுத்துவதாக அமைந்துவிடுகிறது.
செல்போன் மற்றும் இணையதளங்களே இந்த வதந்தி வேகமாக பரவக் காரணம் என்பதை அறிந்த மத்திய அரசு செல்போனில் எஸ்.எஸ்.எம். அனுப்ப கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இப்போது நிலைமை சீரடைந்தபின் அந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.மக்களிடையே விரோதத்தை ஏற்படுத்தும் கருத்துகளை வெளியிட்டதாக 310 இணைய தளங்கள் கண்டறியப்பட்டு அவை முற்றிலுமாக தடை செய்யப்பட்டன.
இந்நிலையில் அடுத்த கட்டமாக இணையதளங்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அதே நேரத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், பிரதமரின் முதன்மைச் செயலாளர் புலோக் சாட்டர்ஜி ஆகியோர் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
முன்னதாக தில்லியில் சனிக்கிழமை காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய மன்மோகன் சிங், இணையம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைச் சுட்டிக்காட்டி, அதனைத் தடுக்க மத்திய அரசு சைபர் பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்தி வருவதாகத் தெரிவித்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக