டெல்லி: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்டாத மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.காவிரி நதி நீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. உச்ச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.கே. ஜெயின், எம்.பி. லோகுர் ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்த போது முதலில், மத்திய அரசு வழக்கறிஞரைப் பார்த்து காவிரி நதிநீர் ஆணையக்
கூட்டத்துக்கான தேதி குறிக்கப்பட்டுவிட்டதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. மாநில அரசுகளிடம் தேதி கேட்டிருக்கிறோம் என்று கூறினார்.
இதில் செம கடுப்படைந்த நீதிபதிகள், காவிரி நதிநீர் ஆணையத்தின் தலைவராக பிரதமர் இருக்கும் போது இத்தனை தாமதம் ஏன் என்று கேள்வி எழுப்பினர். அப்போது தமிழக அரசு தரப்பில், மாநில அரசுகளுக்கு பிரதமர் அலுவலகம் எந்த கடிதமும் எழுதாமல் நீர்வளத்துறையின் ஜூனியர் அதிகாரி ஒருவர் மூலம் மாநிலங்களின் தேதி கேட்டு கடிதத்தை அனுப்பி வைத்திருக்கின்றனர் என்று சுட்டிக்காட்டப்பட்டது.
இதையடுத்து, பிரதமர் அலுவலகம் என்று நாங்கள் பார்க்கிறோம். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதுடன், மத்திய அரசு வழக்கறிஞரிடம், இந்த வழக்கில் கர்நாடக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுவில் என்ன கூறியிருக்கின்றனர் என்று தெரியுமா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு தலையை சொறிந்த மத்திய அரசு வழக்கறிஞர், இன்னும் படித்துப் பார்க்கவில்லை என்று சொன்னார். கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், காவிரி நதிநீர் ஆணையத்தை செல்லாது என்று சொல்லியிருக்கிறார் என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள் ஏன் மத்திய அரசு இப்படி காவிரி நீர் பிரச்சனையில் இத்தனை மெத்தனமாக இருக்கிறது என்று கேள்வி எழுப்பினர். இதனால் வேறு வழியின்றி மன்னிப்பு கேட்கும் நிலைக்குப் போன மத்திய அரசு வழக்கறிஞர் மிகுந்த தயக்கத்துடன் அனைத்து விவரங்களுடன் வெள்ளிக்கிழமையன்று நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்கிறேன் என்றார்.
பின்னர், காவிரி நதிநீர் ஆணையத்துக்கான தேதியை மத்திய அரசு குறிக்காவிட்டால் உச்சநீதிமன்றமே காவிரி நதிநீர் ஆணையத்துக்கான தேதியை தீர்மானித்து அறிவிக்கும் என்றும் எச்சரித்தனர். இதையடுத்து வழக்கின் விசாரணையை வரும் 7-ந் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக