புதுடெல்லி:தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினருக்கு பதவி உயர்விலும் இட ஒதுக்கீட்டை அனுமதிக்கும் சட்டத்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மசோதா மீதான வாக்கெடுப்பிற்கு முன்பு அமைச்சரவையின் சிபாரிசை பரிசோதிப்பதற்கு பாராளுமன்ற குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. சட்டத்திருத்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற மூன்றில் இரு மடங்கு உறுப்பினர்களின்
ஆதரவு தேவை.
அதேவேளையில், மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அனுமதிக்கமாட்டோம் என்று சமாஜ்வாதிக் கட்சி கூறியுள்ளது. இம்மசோதா அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், உச்சநீதிமன்றம் ஏற்கனவே இதனை நிராகரித்துவிட்டது எனவும் சமாஜ்வாதிக் கட்சி தலைவர் ராம் கோபால் யாதவ் தெரிவித்துள்ளார். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்றும், இல்லையெனில் அவர்கள் வாய்ப்புக்களை இழக்க நேரிடும் என்பது சமாஜ்வாதிக் கட்சி கூறி வருகிறது. அரசியல் ஆதாயமே இம்மசோதாவின் பின்னணியில் அரசுக்கு இருப்பதாக ராம் கோபால் யாதவ் குற்றம் சாட்டுகிறார்.
மசோதாவைக் குறித்து விவாதிக்க முன்னர் மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சமாஜ்வாதிக் கட்சி சட்டத்திருத்த மசோதாவை கொண்டுவருவதை கடுமையாக எதிர்த்தது. இடதுசாரிகளும், பகுஜன் சமாஜ் கட்சியும் இம்மசோதாவை ஆதரிக்கின்றன. இம்மசோதாவை ஆதரிக்க வேண்டுமெனில் சில திருத்தங்களை செய்யவேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி கூறுகிறது.
இதனிடையே, மசோதாவை நிறைவேற்ற ஆதரிக்குமாறு கோரி பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் பாரதீய ஜனதா கட்சி மக்களவை மற்றும் மாநிலங்களை தலைவர்களான சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோரை சந்தித்தார். ஆனால், சட்ட மசோதா வருகிற புதன்கிழமை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதால், அன்று ஒரு நாள் மட்டும் பாராளுமன்றம் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற மாயாவதியின் கோரிக்கையை பாரதிய ஜனதா கட்சி நிராகரித்துவிட்டது. அதேவேளையில் ஒ.பி.சி (இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்) யினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை வழங்குவதில் எதிர்ப்பில்லை என்று மாயாவதி தெரிவித்தார்.
உ.பி முதல்வராக மாயாவதி பதவி வகித்த வேளையில் தாழ்த்தப்பட்ட-பழங்குடியின மக்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை வழங்கியதை கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் தடைச் செய்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக