வியாழன், செப்டம்பர் 13, 2012

கூடங்குளத்தில் போலீஸ் வெறியாட்டம்: இன்று கடலுக்குள் மனிதசங்கிலி போராட்டம் !

நெல்லை: போலீசாரின் கைது நடவடிக்கைகளைக் கைவிட வலியுறுத்தி கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவினர் கடல் நீருக்குள் இறங்கி கழுத்தளவு தண்ணீரில் நின்று மனித சங்கிலி போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். அதன்படி இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை இந்தப் போராட்டம் நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இடிந்தகரையில் நேற்று முன் தினம் தொடங்கிய இரண்டு நாள்
உண்ணாநிலைப் போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது. தமிழகமெங்கும் கூடங்குளம் மக்களுக்கு ஆதரவான குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ள இந்த சூழலில், தங்களது அடுத்த கட்ட போராட்டத்தை இடிந்தகரை மக்கள் அறிவித்திருக்கிறார்கள். கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்பும் பணியை மேற்கொள்ளக் கூடாது,  கைது நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும்,  கைது செய்யப்பட்டவர்களை எந்த நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும், காவல்துறையினரின் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஆகிய 4 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை நடத்தப் போவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுமின்நிலையத்தில் உள்ள அணு உலைகளில் யுரேனியம் எரிபொருளை நிரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகைப்போராட்டத்தை அமைதியான வழியில் நடத்திய சுற்றுவட்டார மக்கள் மீது போலீஸ் அடக்குமுறையை ஏவி அடித்து விரட்டியது. அத்தோடு நிற்காமல் நேற்று முன் தினம் எவ்வித போராட்டமும் நடைபெறாதபோது கூடங்குளம் கிராமத்தில் ஆண்கள் எவரும் இல்லாத சூழலில் மதியம் 1 மணிக்கு தமது வெறியாட்டத்தை துவக்கிய தமிழக ஜெயா அரசின் போலீஸ் வீடு, வீடாக நுழைந்து தமது அராஜகத்தை அரங்கேற்றியுள்ளது.
ஊடகங்கள் அனைத்தும் போலீஸாருக்கு பின்னால் பதுங்கிய நிலையில் கூடங்குளம் மற்றும் இடிந்தகரை கிராமங்களில் அரங்கேறிய போலீசின் வன்முறை வெறியாட்டங்கள் வெளியுலகிற்கு தெரியாமல் மூடி மறைக்கப்பட்டுள்ளன.
அங்கு நடந்த போலீஸ் நடத்திய வெறியாட்டங்களில் சில:
நிம்மோனியா காய்ச்சல் பாதித்தவரை அடித்து உதைத்து மண்டையை உடைத்து கைது செய்த கொடுமை!
7 வயது சிறுவனின் தலையிலும், கையில் அடித்து தாக்கிய கொடூரம்.
எதிர்த்து கேட்ட பெண்களை பிறப்புறுப்பில் குத்திய, சேலையை பிடித்து இழுத்த காமவெறிக் கூட்டம்.
போலீஸ் கூறிய கெட்ட வார்த்தைகளை கூற பெண்கள் கூச்சப்படுகின்றார்கள்.
சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளன.
30 டூவீலர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
மக்கள் மீது பொய் வழக்கு.
மொத்தப் படையும் போட்ட வெறியாட்டம்
ஊரைவிட்டுப் போ என போலீஸ் அடித்துள்ளார்கள்
எம்.பி.ஏ மாணவன் கைது! தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. அவனது தாயாரிடம் கேவலப் பேச்சு!
வீட்டில் சும்மா இருந்த மகனை ஒரே அடியில் சுருண்டு விழுந்த கொடுமை! அடித்து இழுத்துச் சென்ற கொடூரம்!
ஆட்டோ, லாரி நொறுக்கப்பட்டது.
இனிமேல் நீங்கள் போராடக்கூடாது என்று திட்டமிட்டு தாக்கிய அராஜகம். இருந்த போதிலும் அந்த மக்களின் உறுதியை குலைக்க முடியவில்லை.
இவ்வளவு கொடூரம் நடந்த பிறகும், மக்கள் கூறுகின்றார்கள்:   “என்ன நடந்தாலும், அணு உலையை மூடியே தீருவோம்!”
மேலும் தங்களது வாழ்வாதாரம் பாதித்தாலும் பரவாயில்லை எங்கள் கணவர்களை மீண்டும் போராட்டக் களத்திற்கு அனுப்புவோம் என கூறுகின்றனர் மக்கள்.
எந்த அரசியல் கட்சியும், ஊடகங்களும் வரவில்லை என்று மக்கள் ஆதங்கப்படுகின்றார்கள். இனி எந்த கட்சியும் எங்கள் ஊருக்குள் நுழையக் கூடாது என்று ஆவேசப்படுகின்றார்கள்.
உயர் போலீஸ் அதிகாரியொருவர் கூடங்குளம் மக்கள் நாடார்கள் என்றும், இடிந்தகரை மக்கள் மீனவர்கள் என்றும் சாதிப் பிரிவினையை தூண்டியுள்ளார். ஆனால், கூடங்குளம் அணு உலை வெடித்தால் நாங்கள் அனைவரும்தானே சாகவேண்டும் என கூறி சாதிவெறியை தூண்டி எங்கள் போராட்டத்தை ஒடுக்கிவிட முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
இந்நிலையில்  கூடங்குளம் அருகே இடிந்தகரையில் இன்று கடலில் கழுத்தளவு தண்ணீரில் நின்று போராடப் போவதாக போராட்டக் குழுவினர் அறிவித்து இருக்கின்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக போலீஸ் அடக்குமுறையால் அஞ்சி ஓடிவிடுவார்கள் என எண்ணியவர்களின் எண்ணத்தை சிதைக்கும் வகையில் அடக்குமுறைக்கு அடங்கி ஒடுங்கிவிடாமல் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை வீரியத்துடன் முன்னெடுத்துச் செல்கின்றார்கள் மக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக