கொல்கத்தா:வருகிற மக்களவை தேர்தலில் 3-வது அணியை உருவாக்கும் முயற்சியில் சமாஜ்வாதிக் கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். பல்வேறு சிறிய கட்சிகளின் ஆதரவு இல்லாமால் காங்கிரஸாலோ, பாஜகவாலோ ஆட்சி அமைத்துவிட முடியாது என்று அவர் கூறியுள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் கூறியது: அடுத்து மத்தியில் அமையும் ஆட்சி சமாஜ்வாதியின் ஆதரவு இல்லாமல் அமையாது.
பல்வேறு சிறிய கட்சிகளின் ஆதரவு இல்லாமால் காங்கிரஸாலோ, பாஜகவாலோ ஆட்சி அமைத்துவிட முடியாது. நாட்டை பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களுக்குள் தள்ளிவிட்ட காங்கிரஸ் தலைமையான அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
அதே நேரத்தில் எதிர்க்கட்சியான பாஜகவின் வளர்ச்சி எப்போதோ நின்று விட்டது. எனவே அடுத்து மத்திய ஆட்சியில் சமாஜ்வாதிதான் முக்கியப் பங்கு வகிக்கும். இதற்கு கட்சித் தொண்டர்கள் இப்போதே தயாராக வேண்டும்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு உள்பட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளால் காங்கிரஸ் கட்சி மக்கள் மத்தியில் தனது மதிப்பை இழந்து வருகிறது.
நாள்தோறும் ஒரு ஊழல் என்ற கணக்கில் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன. இந்த சூழ்நிலையை தங்களுக்கு ஆதரவாக்கிக் கொள்ள பாஜக முயற்சிக்கிறது. ஆனால் அவர்கள் ஆட்சி அமைத்தால் தங்கள் கொள்கைகளின்படி நாட்டை பின்னோக்கித்தான் பாஜக அழைத்துச் செல்லும். எனவே காங்கிரஸ், பாஜக அணியைச் சேராத கட்சிகளைத் தொடர்பு கொள்ளத் தயாராகி வருகிறேன்.நாட்டின் இதர பகுதிகளில் கட்சியின் செயல்பாடுகளை விரிவுப்படுத்த வேண்டியுள்ளது. அனைத்துப் பிரிவு மக்களும் சமாஜ்வாதிக் கட்சியில் உள்ளனர்.
சிறுபான்மை என்ற துருப்புச்சீட்டை வைத்து அரசு விளையாடுகிறது. ஆனால், ஏன் ஐ.மு அரசு சச்சார் கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்தவில்லை? ராகுல் காந்திக்கு நாட்டை ஆளும் திறமை கிடையாது. இவ்வாறு முலாயம்சிங் யாதவ் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக