புதன், ஏப்ரல் 10, 2013

குப்பை நகரமாக மாறியது சென்னை !

  • சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளன. தினமும் சென்னை மாநகரப்பகுதிகளில் 4,000 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்படுவதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
  • குப்பை பிரச்னை சென்னை மாநகராட்சிக்கு தொடர்ந்து தீராத தலைவலியாக இருந்து வருகிறது. குப்பையை அகற்ற லட்சக்கணக்கில் செலவழித்தும் நகரை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள முடியவில்லை. இவ்வாறு குப்பைகள் ஆங்காங்கே தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் பல்வேறு தொற்று நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

    சென்னையில் தினமும் குப்பைகள் அகற்றப்படுவதில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.ஆனால் மாநகராட்சியோ, தினமும் காலை 6.30 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 2 மணி வரை குப்பைகளை அகற்றி வருவதாக தெரிவிக்கிறது. காலை 6.30 மணியிலிருந்து 10.30 மணி வரையும், மதியம் 2.30லிருந்து மாலை 5.30 மணி வரையும், இரவு 9லிருந்து அதிகாலை 2 மணி வரையும் என மூன்று ஷிப்ட் அடிப்படையில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் கொடுங்கையூரில் 200 ஏக்கர் பரப்பரளவில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் 2100 மெட்ரிக் டன் முதல் 2,300 மெ.டன் வரை கொட்டப்படுகிறது. அதேபோன்று பெருங்குடி குப்பை கிடங்கில் 2,200 மெ.டன் முதல் 2.400 மெ.டன் வரை தினமும் கொட்டப்படுகிறது. மேலும் விரிவாக்கப்பகுதிகளில் உள்ள இடங்களில் உள்ள குப்பை கிடங்குகளிலும் கொட்டப்படுகிறது. ஆனால் குப்பையை கையாளுவதில் உள்ள சிக்கலால் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துறையின் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிந்து வருகிறது. அதிலும் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் குப்பை பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக