கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தை மேலும்
தீவிரப்படுத்துவது, தேர்தலில் எவ்வாறு செயல்படுவது என்பன உள்ளிட்ட பல்வேறு
விஷயங்கள் குறித்து ஆதரவுக் கட்சிகள், அமைப்புகளுடன் வரும் 7ஆம் தேதி
ஆலோசனை நடத்தவுள்ளதாக போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார்
தெரிவித்தார்.
கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி அணு விஜய் நகரியத்திலுள்ள ஊழியர்
குடியிருப்பை கடல்வழியாக முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவர்
செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
தரமற்ற உதிரி பாகங்களை அணுஉலையில் அமைத்திருக்கிறார்கள். இவற்றை
வழங்கியிருக்கும் ரஷிய நிறுவனம் அந்நாட்டு விசாரணை வளையத்துக்குள்
இருக்கிறது. அணுமின் நிலையத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டதாக அணுசக்தி கழக
முன்னாள் தலைவர் எம்.ஆர். ஸ்ரீநிவாசன் தெரிவித்திருக்கிறார்.
கூடங்குளம் அணுஉலை இயங்கும் நிலையில் இல்லை. சோதனை ஓட்டம் குறித்து
மக்களுக்கு ஏன் முன்கூட்டியே அணுமின் நிலைய வளாக இயக்குநர்
தெரிவிக்கவில்லை?
ரஷிய அதிபரை மகிழ்ச்சிப்படுத்தவே "ஏப்ரலில் மின் உற்பத்தி' என்று
பிரதமர் அறிவித்திருக்கிறார். எங்கள் வாழ்வுரிமைக்காகவும்,
வாழ்வாதாரத்துக்காகவும் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம்.
போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவது, தேர்தலில் எவ்வாறு செயல்படுவது
என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆதரவுக் கட்சிகள்,
அமைப்புகளுடன் வரும் 7ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளோம் என்றார் உதயகுமார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக