கொழும்பு:தமிழகத்தில் மதரீதியான சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை குடிமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இலங்கை தமிழர்களுக்கு எந்த வகையிலும் உதவாது என்று இலங்கையின், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் அண்மையில் இலங்கை யாத்ரிகர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் குறித்து கருத்து தெரிவித்துள்ள
மனோ கணேசன் கூறியது:
இந்த சம்பவங்கள் கண்டிக்கத்தக்கவை என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு. இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக தமிழகத்தில் அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்களை நான் வரவேற்கிறேன். இத்தகைய போராட்டங்கள் இலங்கை அரசையும், இந்திய அரசையும் குறிவைத்து நடத்தப்பட வேண்டும். ஆனால், பொதுமக்களை குறிவைக்க கூடாது. அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.
போரின் போது அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்டிக்காமல் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த சிங்கள பொதுமக்கள் இப்போது, போர் முடிந்த பிறகு, தமிழகத்துக்கு பிரார்த்தனை செய்ய வருவதை உணர்வுள்ள தமிழர்கள் எதிர்க்கிறார்கள் என்று இப்போராட்டத்தை நடத்துபவர்களால் சொல்லப்படுகிறதே என்று கேட்டதற்கு பதிலளித்த மனோ கணேசன், “இது போன்ற ’ பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் ’ என்ற ரீதியான வாதங்களை ஒரு நாகரிகமான சமுதாயத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற ஒரு கட்சியின் தலைவன் என்ற வகையில் தன்னால் அங்கீகரிக்க முடியாது” என்றார்.
ஆனால் தமிழகத்தில் நடந்த இந்தப் போராட்டங்களுக்கு எதிராக இலங்கையில் சில சிங்கள-புத்த தீவிரவாத அமைப்புகள் கண்டனங்களை விடுத்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர், இது போன்ற கண்டனங்களை விட அவர்களுக்கு எந்த விதத் தகுதியும் இல்லை என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக