கெய்ரோ:சிரியாவில் மக்கள் எழுச்சிப் போராட்டம் மிகவும் தீவிரமடைந்துள்ள சூழலில் அதனைப் புரிந்துகொண்டு தனது பதவியை ராஜினாமாச் செய்யுமாறு சர்வாதிகாரி பஸாருல் ஆஸாத்தை எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி வலியுறுத்தியுள்ளார். கெய்ரோவில் உள்ள இண்டர்நேசனல் யூனிவர்சிடி தலைமையகத்தில் நடந்த அரபு வெளியுறவுத்துறை அமைச்சர்களின்
மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார் அவர்.
அப்பொழுது அவர் கூறியது: “துனீசியா, லிபியா, எகிப்து, யெமன் போன்ற நாடுகளின் சமீபகால வரலாற்றில் இருந்து பஸ்ஸார் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அடக்குமுறையாளர்களும், ஊழல்வாதிகளுமான ஆட்சியாளர்களை அதிகாரத்தில் இருந்து கீழே இறக்கிய அரபு வசந்தத்தைக் குறித்து புரிந்துக் கொள்ள பஸார் தயாராக வேண்டும். பிரச்சனை மேலும் சிக்கலாகும் முன்பு அவர் பதவி விலக வேண்டும்.
இரத்தக் களரியாக மாறிய சிரியா நகரங்களில் அமைதியை மீண்டும் நிலைநாட்ட இன்னமும் வாய்ப்புகள் உள்ளன. ஆட்சியில் தொடருமாறு தூண்டும் பிறருடைய உபதேசங்களை பஸார் பொருட்படுத்த வேண்டாம். காரணம் நீங்கள் அதிக காலம் அந்த பதவியில் நீடிக்க முடியாது என்பது சிரியாவில் நிலவும் நிலைமைகளில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது. நாங்கள் சிரியா மக்களுடன் தான் உள்ளோம்.
அரபு நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட எந்தவொரு நாட்டையும் அனுமதிக்க மாட்டோம். ஐக்கிய நாடுகள் அவையில் பூரண உறுப்பினராவதற்கான ஃபலஸ்தீனின் முயற்சியை அனைவரும் ஆதரிக்க வேண்டும்” என்று முர்ஸி தனது உரையில் கூறினார்.
சிரியா குறித்த முர்ஸியின் உரையில் வருத்தம் தொனித்தது. “சிர்யா மக்களின் இரத்தம் இரவு, பகலாக சிந்தப்படுகிறது. இதற்கு நாம் தான் பொறுப்பேற்க வேண்டும். சிரியா மக்களின் இரத்தம் சிந்தப்படும் பொழுது நாம் தூங்கிக் கொண்டிருக்க கூடாது. அரபு நாடுகளின் அமைச்சர்களே! சிரியாவின் துயரத்திற்கு உடனடியான தீர்வை கண்டுபிடிக்க உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். நாம் முயற்சி செய்யாவிட்டால், உலகமும் தீவிர முயற்சியில் இறங்காது.” என கூறிய முர்ஸி, தனது உரையை , “ஒரு நாள் மக்கள் அவர்களின் வாழ்க்கையை தீர்மானித்துவிட்டால் விதி அதற்கு பதிலளித்தாக வேண்டும். இரவு விலகியே தீரும். சங்கிலிகள் அறுத்தெறியப்படும்” என்ற பொருள் கொண்ட கவிஞர் அபீல் காஸிம் அஷ்ஷாபியின் கவிதையை கூறி முடித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக