கூத்தங்குழி: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் முதல் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வரையிலான கடலோரப் பகுதிகளை ஒருங்கிணைத்து தனி மீனவர் தொகுதியாக அறிவிக்கக் கோரி கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புக் குழுவினர் திடீர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக கூத்தங்குழியில் அவசரக் கூட்டம் ஒன்றும் கூட்டப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே மீனவர்கள்தான் தீவிரமாக
ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் ஒத்துழைப்புடன்தான் போராட்டத்தையும் போராட்டக் குழுவினர் தொய்வின்றி நடத்தி வருகின்றனர்.
தற்போது புதிய கோரிக்கை ஒன்றை அணு மின் நிலைய எதிர்ப்புக் குழு கையில் எடுத்துள்ளது. அதாவது கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் முதல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், மண்டபம் வரையிலான அனைத்து கடலோர கிராமங்களையும் ஒருங்கிணைத்து தனி மீனவர் தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற புதிய கோரிக்கையை அது கையில் எடுத்துள்ளது.
இந்தக் கோரிக்கையை தமிழக அரசும், மத்திய அரசும் ஏற்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் தேர்தல்களைப் புறக்கணித்து யாருக்கும் வாக்களிக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் அவர்கள் களம் இறங்கியுள்ளனர்.
இதுதொடர்பாக கூத்தங்குழியில் இன்று மாலை அவசரக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதில் குளச்சல் முதல் மண்டபம் வரையிலான மீனவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதில் இந்தக் கோரிக்கை தவிர வேறு பல முக்கிய முடிவுகளும் எடுக்கப்படவுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கிறது.
கூட்டத்தில் பங்கேற்பதற்காக கூத்தங்குழிக்கு மீனவர்கள் கூட்டம் கூட்டமாக கிளம்பிப் போய்க் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக