கொல்கத்தா: மத்திய அரசின் டீசல் விலை உயர்வு, அன்னிய முதலீட்டுக்கு அனுமதி போன்றவற்றை திரும்பப் பெற 72 மணி நேர கெடு விதித்திருக்கும் மமதா பானர்ஜி, வழக்கம் போல "ஆட்சியைக் கவிழ்க்க விரும்பவில்லை" என்ற பல்லவியை பாடி வருகிறார். இதனால் அமைச்சரவையிலிருந்து விலகி வெளியிலிருந்து மன்மோகன்சிங் அரசை திரிணாமுல் காங்கிரஸ் ஆதரிக்கக் கூடும் என தெரிகிறது. சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை கடுமையாக
எதிர்ப்பவர்களில் ஒருவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் மமதா. மத்திய அரசின் அனைத்துவித உயர்வு நடவடிக்கைகளுக்கும் முதல் எதிர்ப்புக் குரல் தெரிவித்து வருபவரும் மமதா. டீசல் விலை உயர்வு மற்றும் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி ஆகியவற்றைக் கண்டித்து நேற்று கொல்கத்தாவில் பிரம்மாண்ட பேரணியை நடத்திய மமதா பானர்ஜி, பேரணியின் முடிவில் அதிரடி அறிவிப்பை வெளியிடுவார் என்றே ஊடகங்கள் எதிர்பார்த்தன. ஆனால் எப்பொழுதும் மமதா பேசும், "ஆட்சியைக் கவிழ்க்க நாங்கள் விரும்பவில்லை.. ஆனால் கடினமான முடிவுகளை எடுக்க நேரிடும்" என்றே கூறியிருக்கிறார்.
நேற்றைய பேரணியின் முடிவில் பேசிய மமதா பானர்ஜி, "நாங்கள் ஆட்சியைக் கவிழ்க்க விரும்பவில்லை. அதே நேரத்தில் கூட்டணி அரசாங்கத்தில் லட்சுமண ரேகை என்று ஒன்று இருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். சீர்திருத்தங்கள் என்பவை அவசியம்தான். ஆனால் ஏழை மற்றும் பொதுமக்களைப் பாதிக்காத வகையில் அந்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.
மேலும், "ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நாங்கள் 2-வது பெரிய கட்சி. ஆனால் மத்திய அமைச்சரவைப் பொறுத்தவரையில் ரயில்வே அமைச்சகம் மட்டும்தான் எங்களுக்கு. மற்ற இருவரும் இணை அமைச்சர்கள்தான். எங்களுக்கு 4 கேபினட் அமைச்சர் பதவி கிடைத்திருக்க வேண்டும். ஆனால் ஒருபோதும் கேபினட் அமைச்சர் பதவிகளுக்காக நாங்கள் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் அல்ல" என்று கூறியிருக்கிறார்.
மமதாவின் இந்த கொல்கத்தா பேச்சானது 2 விதமான நிபந்தனைகளை மத்திய அரசுக்கு தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. விரைவில் மேற்கொள்ளப்பட இருக்கும் மத்திய அமைச்சரவை மாற்றத்தில் நிச்சயம் திரிணாமுல் காங்கிரஸ் எதிர்பார்ப்பது போல் கூடுதல் கேபினட் அமைச்சர் பொறுப்புகள் கிடைக்கப் போவதில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.
மற்றொன்று, டீசல் விலை உயர்வு, அன்னிய முதலீட்டு விவகாரத்தை மையமாக வைத்து கேபினட் அமைச்சு பதவி கிடைக்காத அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக, மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து அமைச்சரவையில் இருந்து விலகி வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம் என்று அறிவிக்க முடிவு செய்திருப்பதால்தான் இப்படி பேசியிருக்கிறார் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்..
அப்ப அடுத்த தலைப்புச் செய்தி... " மத்திய அமைச்சரவையிலிருந்து திரிணாமுல் விலகல்-வெளியிலிருந்து ஆதரவு"!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக