மதுரை:பாராளுமன்றம் தொடர்ந்து அமளியால் முடங்கியதற்கு ஆளுங்கட்சியான ஐ.மு கூட்டணியும், எதிர்கட்சியான பாரதீய ஜனதாவும் பொறுப்பாளிகள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் நடைபெறும் இந்திய மாணவர் சங்கத்தின் 14-வது அகில இந்திய மாநாட்டில் கலந்துகொண்டு யெச்சூரி உரையாற்றினார். அப்பொழுது அவர் கூறியது: நிலக்கரி ஊழல், 2 ஜி அலைக்கற்றை ஊழலையும் மிஞ்சி விட்டது. இந்த ஊழல் குறித்து வெளிப்படையாக பேசுவதற்கு காங்கிரஸ், பாஜக இரு
கட்சிகளுக்குமே விருப்பம் இல்லை. இதனால், இரு கட்சிகளும் சேர்ந்து நாடாளுமன்றத்தை முடக்கும் சதியைச் செய்து வருகின்றன. நிலக்கரி ஊழலில் இரு கட்சிகளுக்கும் பங்கு உண்டு என்பதால், இத்தகைய போக்கை கடைப்பிடிக்கின்றன.
ஊழல் குற்றச்சாட்டுகள் வந்தபோதெல்லாம், பிரதமர் மன்மோகன் சிங் நேர்மையானவர், ஊழலுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லப்பட்டது. 2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஆ.ராசா பொறுப்பாக்கப்பட்டார். விலைவாசி உயர்வுக்கு சரத்பவார் தான் பொறுப்பு என்றனர். தற்போது பிரதமரின் நேரடிப் பொறுப்பில் இருந்த துறையிலேயே ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதற்கு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியுமே பொறுப்பு.
நாட்டு மக்களின் பிரதான பிரச்னைகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுவதில்லை. சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய வரலாற்றில், இதுவரை இல்லாத நிகழ்வை, நாடாளுமன்றம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. மத்தியில் ஆளும் காங்கிரஸின் பொறுப்பின்மையே தற்போதைய நிலைமைக்கு காரணம். இது நாட்டின் எதிர்காலத்துக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைந்துவிடும். நாட்டில் நிலவும் ஏற்றத்தாழ்வு நிலையை மாற்றுவதற்கு, மாற்று அரசியல் அவசியமாக இருக்கிறது. அதை காங்கிரஸ் அல்லது பாஜகவால் ஏற்படுத்த முடியாது. இடதுசாரி அரசியல் இயக்கங்களால் மட்டுமே மாற்று கொள்கைகளைக் கொண்ட அரசை ஏற்படுத்த முடியும். இதில் இளைஞர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும்.
ஏனெனில், நாட்டின் மக்கள் தொகையில் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. ஆகவே, மாற்று அரசியல் சக்தியை உருவாக்குவதை இளைஞர்களால் சாதிக்க முடியும் என்றார் யெச்சூரி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக