திங்கள், செப்டம்பர் 03, 2012

பீகார் மாநிலத்தவரை வெளியேற்றுவோம் – ராஜ் தாக்கரேயின் மிரட்டலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு !

Political leaders slam Raj Thackeray for anti-Bihari standபுதுடெல்லி:மஹராஷ்ட்ராவில் உள்ள பீகார் மாநிலத்து மக்கள் ஊடுருவல்காரர்கள் என்று மஹாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இவ்வறிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். ராஜ்தாக்கரே மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள்
வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அஸ்ஸாம் மற்றும் மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலைகளை கண்டிக்கும் வகையில், கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி மும்பை ஆஸாத் மைதானத்தில் பேரணி நடைபெற்றது.  இது கலவரமாக மாறியதில் 2 பேர் உயிரிழந்தனர்.  50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அப்பொழுது அமர்ஜவான் நினைவுச்சின்னம் சேதப்படுத்தப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக, பீகார் மாநிலம் சித்தமர்ஹியைச் சேர்ந்த அப்துல் காதிர் முஹம்மது யூனுஸ்(வயது 19) என்ற இளைஞரை மும்பை குற்றப் பிரிவு போலீஸார் கடந்த திங்கள்கிழமை கைது செய்தனர். இதுதொடர்பாக பீகார் மாநில தலைமைச் செயலாளர் நவீன் குமார், மும்பை மாநகர காவல் துறை ஆணையருக்கு கடிதம் எழுதி உள்ளார்.  மாநில அரசின் அனுமதி இல்லாமல் கைது செய்த மும்பை போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மும்பை போலீஸ் மீது நடவடிக்கை எடுத்தால், மும்பையில் உள்ள பீகார் மாநிலத்தவர்களை மஹாராஷ்டிர மாநிலத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றுவோம் என ராஜ் தாக்கரே வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தார்.  இவரது இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் கூறியது:
“மும்பை வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் மீனவர்கள்தான் உண்மையான மும்பைவாசி என்பது தெரியும்.  மற்றவர்கள் அனைவரும் வெளியிலிருந்து வந்து குடியேறியவர்கள்.  ராஜ் தாக்கரே குடும்பத்தினரும் பீகாரிலிருந்து மேற்கு மத்தியப் பிரதேசத்தில் குடியேறி பின்னர், மும்பையில் வந்து தங்கியவர்கள்தான்” என்றார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியது:  “மக்களிடையே மாநிலம் மற்றும் மதத்தின் பெயரில் பாகுபாடு காட்டுவது கூடாது.  நாட்டின் முழு நீள, அகலமும் இந்தியா என்பதை உணர வேண்டும்” என்றார்.
லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான்: “ ராஜ் தாக்கரே மிரட்டலுக்கு மும்பையிலுள்ள பீகார் மக்கள் பயப்படக் கூடாது. ஒரு குறிப்பிட்ட மாநில மக்களுக்கு எதிராக தொடர்ந்து பிரசாரம் செய்துவரும் தாக்கரே மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் சிவானந்த் திவாரி: “தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள தாக்கரே மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைமையிலான மத்திய, மாநில அரசுகள் தயங்குகிறது. அதற்கும் மேலாக அவர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருக்கிறது” என கூறியுள்ளார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறியது: “நாட்டின் எந்தப் பகுதியிலும் வசிக்கவும்,  நிரந்தரமாக தங்கவும் ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிமை உள்ளது.  நமது அரசியல் அமைப்புச் சட்டம் இதற்கான உரிமையை வழங்கி உள்ளது. அதை அனைவரும் மதிக்க வேண்டும்” என்றார்.
பாஜகவைச் சேர்ந்த பீகார் மாநில அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியது:  “ஒரு மாநில போலீஸ் மற்றொரு மாநிலத்தில் உள்ள ஒருவரைக் கைது செய்யும்போது சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.  இதுவிஷயத்தில் முரண்பட்ட கருத்து தெரிவித்த ராஜ் தாக்கரே மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி செயலாளர் தாரிக் அன்வர், ராஷ்ட்ரிய ஜனதா தள செய்தித் தொடர்பாளர் ராம்கிரிபால் யாதவ், ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார்,  இக்கட்சியின் ஜார்க்கண்ட் மாநில பிரிவு செய்தித் தொடர்பாளர் பிரமோத் மிஸ்ரா உள்ளிட்ட பலர்,  ராஜ் தாக்கரே கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக