புதுடெல்லி:ஐக்கிய நாடுகள் அவையில் ஃபலஸ்தீன் நாட்டிற்கு பிற நாடுகளைப் போலவே சம உரிமைகள் அடங்கிய பூரண உறுப்பினர் பதவிக்கு இந்தியா முழு ஆதரவை தெரிவித்துள்ளது. மேலும் ஃபலஸ்தீனுக்கு ஒரு கோடி அமெரிக்க டாலர் நிதி உதவியையும் அறிவித்துள்ளது. இந்தியா வருகை தந்துள்ள ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸும், இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கும் இரு நாடுகள் இடையேயான பிரச்சனைகள், மேற்காசியா மற்றும் வளைகுடா பிராந்திய வளர்ச்சிகள் மற்றும்
பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் நவீன தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட 3 முக்கிய ஒப்பந்தங்களில் இரு நாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸும், பிரதமர் மன்மோகன்சிங்கும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது பிரதமர் மன்மோகன்சிங் கூறியது: “இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஃபலஸ்தீனுக்கு ஆதரவு அளிப்பது முக்கிய அம்சமாகும். கிழக்கு ஜெருசலத்தை தலைநகராகக் கொண்ட ஐக்கிய ஃபலஸ்தீன் தேசத்திற்கான போராட்டத்தில் இந்தியா அனைத்து ஆதரவையும் அளிக்கும்.
இஸ்ரேலுடன் இணைந்து அமைதிக்காக ஒன்றிணைந்து செயல்படும் சுதந்திர ஃபலஸ்தீனுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும். ஃபலஸ்தீனத்தின் நிதி தேவைகளுக்கு உதவும் வகையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள்(ஒரு கோடி டாலர்) வழங்கப்படும். ஐ.நா.வில் முழு உறுப்பினர் அந்தஸ்தைப் பெறுவதற்காக முயற்சி மேற்கொண்டு வரும் ஃபலஸ்தீனுக்கு இந்தியா முழு ஆதரவை அளிக்கும். ஃபலஸ்தீன் யுனெஸ்கோவின் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு இந்தியா முக்கிய பங்காற்றியது. இவ்வகையிலான ஃபலஸ்தீனின் முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவு இனியும் தொடரும் என்று மன்மோகன்சிங் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக