புதன், செப்டம்பர் 12, 2012

கூடங்குளம் போலீஸ் அராஜகம்: தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டம் !

கூடங்குளம் போலீஸ் அராஜகம்-தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டம்!சென்னை:கூடங்குளத்தில் அமைந்துள்ள அணு உலைகளில் யுரேனியம் நிரப்புவதை நிறுத்தக்கோரி அமைதியான முறையில் போராட்டம் நடத்திய சுற்றுவட்டார மக்கள் மீது வன்முறையை ஏவிய தமிழக காவல்துறையின் அராஜகத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பாக போராட்டங்கள் நடைபெற்றன.ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா, மனிதநேய மக்கள் கட்சி,
நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல்கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். தென் மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லையில் SDPI கட்சி மற்றும் ம.தி.மு.க இணைந்து நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் அருகில் 11 .09 .12 அன்று செவ்வாய் மாலை 4 .30 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு SDPI கட்சியின் மாநில செயலாளர் நாஞ்சில் செய்யது அலி அவர்கள் தலைமை தாங்கினார். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் பிஸ்மி காஜா, மாவட்ட பொது செயலாளர் ஜிந்தா, துணைத் தலைவர்களான நசீர் கான் மற்றும் மௌலவி.சாகுல் ஹமீது உஸ்மானி, நெல்லை , பாளை, அம்பை மற்றும் நாங்குநேரி தொகுதி மற்றும் நகர நிர்வாகிகளும் , செயல்வீரர்களும் மற்றும் ம.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் 200 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் காந்திபுரத்தில் ம.தி.மு.கவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் எஸ்.டி.பி.ஐ சார்பாக நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு மாநில செயலாளர் கோவை அபூதாஹிர் தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் 150க்கும் மேற்பட்டோர் கைதுச்செய்யப்பட்டனர்.
மதுரையில் ரயிலை மறிக்க முயற்சித்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்பட 76 கைது செய்யப்பட்டனர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மதுரை தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார். தல்லாகுளம் பகுதியில் அணுஉலை எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தலைமை வகித்தார். மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஊர்வலமாகச் சென்றனர்.
திண்டுக்கல்லில் எஸ்.டி.பி.ஐ சார்பாக நடந்த போராட்டத்திற்கு மாவட்டத்தலைவர் முஸ்தபா, பொதுச்செயலாளர் சதக்கத்துல்லாஹ் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடியில் மீனவர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருவைகுளத்தில் இருந்து பெரியதாழை வரையிலான 11 கடலோர கிராமங்களிலுள்ள 2,100 நாட்டுப் படகுகள், 300 விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டன.
கடலோர பாதுகாப்பு கூட்டமைப்பினர் சார்பில், தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சியினர், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
மீனவர்கள் போராட்டம் காரணமாக, தூத்துக்குடியில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். தூத்துக்குடியில் மறியல், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 2-வது நாளாக மீனவர்கள் செவ்வாய்க்கிழமையும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி, வாவத்துறை, கோவளம், ஆரோக்கியபுரம், கீழமணக்குடி, மேலமணக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரியில் இருந்து கூடங்குளம் வழியாகச் செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாயினர்.
சென்னையில் கூடங்குளம் பகுதி மக்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையிலும் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. மதிமுக, தமிழர் வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.கோயம்பேடு பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சி சார்பில், எழும்பூர் ரயில் நிலையம் பின்புறம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டம், மறியலில் 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
திண்டிவனத்தில் தாலுகா அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கரூரில் நடைபெற்ற போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக