புதன், செப்டம்பர் 12, 2012

அமைச்சரவையை மாற்ற சோனியா முடிவு: திமுகவுக்கு 2 கேபினட் பதவிகள்.. பாலு மீண்டும் அமைச்சர்?

டெல்லி: மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திட்டமிட்டுள்ளார். இதில் திமுகவுக்கு மத்திய அமைச்சரவையில் இரு கேபினட் பதவிகள் தரப்படும் என்று தெரிகிறது. மக்களவைத் தேர்தலுக்கு காங்கிரஸை தயார் செய்யும் வகையில், சில மூத்த அமைச்சர்களை கட்சிப் பதவிக்குக் கொண்டு வர சோனியா முடிவு செய்துள்ளார். அதே நேரத்தில் நிலக்கரி ஊழல் விவகாரத்தில் அரசுக்கு
ஏற்பட்டுள்ள கெட்ட பெயர் துடைக்க நிலக்கரித்துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், சுற்றுலாத்துறை அமைச்சர் சுபோக் காந்த் சகாய் ஆகியோரை நீக்கவும் முடிவு செய்துள்ளார். அதே போல சில அமைச்சர்களின் இலாகாக்களிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது. ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி வெளியேற்றத்துக்குப்பின் அங்கு காங்கிரஸ் தேய்ந்து போய்விட்டது. இதையடுத்து அம் மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டியை நீக்கி விட்டு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டியை ஆந்திர முதல்வராக்க சோனியா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க ஏதுவாக மூத்த காங்கிரஸ் தலைவரான வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கட்சிப் பணிக்கு அனுப்பப்படலாம் என்கிறார்கள். இதனால் பெட்ரோலியத்துறைக்கும், வெளியுறவுத்துறைக்கும் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படலாம்.
இந்த அமைச்சரவை மாற்றங்கள் இந்த மாத இறுதியில் செய்யப்படும் என்று தெரிகிறது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ராசாவும், தயாநிதி மாறனும் அமைச்சர் பதவிகளை விட்டு விலக நேர்ந்த நிலையில் அவர்களுக்குப் பதிலாக திமுகவைச் சேர்ந்த வேறு யாருக்கும் பதவிகள் தரப்படவில்லை.
மம்தா பானர்ஜி போல் அல்லாமல் எல்லா விவகாரங்களில் மத்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி மிக ஆதரவாக இருந்து வருவதால், திமுகவுக்கான கேபினட் பதவிகளை மீண்டும் அந்தக் கட்சிக்குத் தர சோனியா முன் வந்துள்ளதாகத் தெரிகிறது.
இதனால் ராசா, தயாநிதி ஆகியோருக்குத் தரப்பட்ட கேபினட் அமைச்சர் பதவிகள் திமுகவைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்படலாம்.
இதில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, விஜயன், டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரில் இருவரை மத்திய கேபினட் பதவிக்கு கருணாநிதி நியமிக்கலாம் என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக