செவ்வாய், செப்டம்பர் 11, 2012

சி.பி.எம்மின் பிழைப்பு வாத அரசியல் . . .

சி.பி.எம்மின் பிழைப்பு வாத அரசியல்!சென்னை:உழைக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடும் கட்சியாக தன்னை முன்னிலைப்படுத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரமுகம் நந்திகிராம், சிங்கூரிலும் வெட்ட வெளிச்சமானது. தாராள மயமாக்கலையும், உலக மயமாக்கலையும் எதிர்ப்பதாக காட்டிக்கொண்டு சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரால் அந்நிய நாட்டு நிறுவனத்திற்கும், தனியார் குத்தகைகளுக்கும் உழைக்கும்
வர்க்கத்தினரின் நிலங்களை அபகரிக்க முயன்றபொழுது நந்திகிராம், சிங்கூர் வாழ் மக்கள் அதனை எதிர்த்து போராடினார்கள். அவர்கள் மீது அடக்குமுறையக் கட்டவிழ்த்து விட்டது முந்தைய மே.வங்காள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு.
அண்மையில் கேரளாவில் சி.பி.எம்மில் இருந்து வெளியேறி புதிய கட்சியை துவக்கிய டி.பி.சந்திரசேகரனின் கொலை உள்பட ஏராளமான அப்பாவிகளின் கொலைகளில் தொடர்புடைய கொலைக்கார கட்சியாக சி.பி.எம் பரிணாமம் அடைந்துள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்திய அரசுடன் மேற்கொள்ளும் இந்நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் ஒப்பந்தங்களை வெளிப்படையாக எதிர்க்கும் (உள்ளூர இவர்கள் அமெரிக்க ஆதரவாளர்கள் என்பதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது)  சி.பி.எம், கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. காரணம் வேறொன்றுமில்லை, கம்யூனிச கொள்கையின் தாயகமான ரஷ்யாவுடன் இந்திய அரசு கூட்டு சேர்ந்து அமைத்ததுதான் கூடங்குளம் அணுமின்நிலையம் என்பதேயாகும். இதிலிருந்தே இவர்களின் அரசியல் கொள்கை பிழைப்பு வாதத்தை அடிப்படையாகக் கொண்டதுஎன்பதை புரிந்துகொள்ள முடியும்.
தினந்தோறும் கழிவுகளை மட்டுமே சுமந்துகொண்டு வரும் தினமலர் என்ற சாக்கடை நாளிதழ், அரசிடமிருந்து ஆதாயம் பெற்றுக்கொண்டு கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் குழுவினரையும், போராட்டக் குழுவின் தலைவரான உதயகுமாரையும் மிக கேவலமாக விமர்சித்து செய்தி வெளியிட்டு வருகிறது.
நேற்று(10/09/2012) கூடங்குளத்தில் அணு உலைகளில் எரிபொருள் நிரப்புவதற்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது அடக்கு முறையை கட்டவிழ்த்துவிட்ட தமிழக காவல்துறையின் அராஜக நடவடிக்கையை கண்டித்து ஒரு வார்த்தைக் கூட எழுதாமல், உதயகுமார் தப்பி ஓடிவிட்டார் என்றும், பாதிக்கப்பட்ட கூடங்குளம் மக்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும் தலைப்புச் செய்தியாக வெளியிட்டு  தனது பாசிச அரிப்பை தணித்துக் கொண்டது.
அதேவேளையில் சி.பி.எம்மின் அதிகாரப்பூர்வ தமிழ் ஏடான தீக்கதிர், தினமலரின் அதே நடையை தனது செய்தியில் கையாண்டுள்ளது.
கீழ்க்கண்ட லிங்கில் சென்று பாருங்கள்
அதேவேளையில் கேரளாவில் எதிர்க்கட்சி தலைவராக உள்ள முன்னாள் சி.பி.எம் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன், கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளார்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜெயலலிதாவிடம் தஞ்சம் புகுந்த தமிழக சி.பி.எம் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று கூடங்குளத்தில் நடந்த போலீஸ் அராஜகத்தை கண்டிக்க துப்பில்லாமல்   “கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு சுமுகமான நிலை ஏற்பட உதவ வேண்டும். அமைதியை ஏற்படுத்த அரசும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” என அரசுக்கு நோகாதவாறு அறிக்கையை வெளியிட்டு தமது சுயரூபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சி.பி.எம்மின் அகில இந்திய பொதுச் செயலாளரான பிரகாஷ் காரட்டும், தாம் கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு ஆதரவானவர்தாம் என்பதை மீண்டும் உறுதிச் செய்யும் வகையில் பேட்டியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சி.பி.எம் உழைக்கும் மக்களின் கட்சி அல்ல, மாறாக பிழைப்புவாத அரசியல் கட்சி என்பது கூடங்குளம் விவகாரத்தில் நிரூபணமாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக