
இந்த நிலையில், 1989ம் ஆண்டே கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து போராட்டங்கள் எழத் தொடங்கின. ஆரம்பத்தில் மிகச் சிறிய அளவிலேயே போராட்டங்கள் இருந்தன. இதனால் அரசுகள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவ்வப்போது கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம் என்றுதான் போராட்டங்கள் இருந்து வந்தன. இதனால் போராட்டங்களால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஏன் இது பெரிய செய்தியாகக் கூட மீடியாக்களில் இடம் பெறவில்லை.
2001ம் ஆண்டுதான் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் தொடங்கி நடக்க ஆரம்பித்தன. அதன் பின்னர்தான் போராட்டங்கள் சற்று வலுப் பெறத் தொடங்கின. 2002ம் ஆண்டு அப்போதைய சுயேச்சை எம்.எல்.ஏவான அப்பாவு தலைமையில் மிகப் பெரிய அளவிலான போராட்டம் நடந்தபோதுதான் கூடங்குளம் குறித்து சற்றே சிறிய அளவிலான விழிப்புணர்வு பிற பகுதிகளில் ஏற்பட்டது.
இந்த நிலையில், 2011ம் ஆண்டு உதயக்குமார் தலைமையிலான அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கூடங்குளம் போராட்டத்தை புதிய களத்திற்குக் கொண்டு சென்றது. இடிந்தகரையில் முகாமிட்டு அவர்கள் தொடங்கிய தொடர் உண்ணாவிரதப் போராட்டம் பெரும் பரபரப்பையும், திருப்பத்தையும் ஏற்படுத்தியது.
உதயக்குமார் குழுவினரின் போராட்டத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்ததால் புதிய பரபரப்பும் ஏற்பட்டது. உதயக்குமாருக்கு முன்பு வரை நடந்த போராட்டங்களின்போது எந்தவிதமான வன்முறையும் வெடித்ததில்லை. போலீஸார் பலத்தைப் பிரயோகிக்கும் நிலை ஏற்பட்டதில்லை. இந்த நிலையில் இன்று முதல் முறையாக கூடங்குளம் மக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசும் அளவுக்கு நிலைமை போயுள்ளது அப்பகுதியினர் மத்தியில் பெரும் பரபரப்பையும், டென்ஷனையும் ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக