பெங்களூர்: பெங்களூர் மாநகரக் காவல்துறை கடந்த ஞாயிறு மாலை ஒரு மருத்துவரையும் ‘பயங்கரவாதிகள்’ பட்டியலில் சேர்த்து கைது செய்துள்ளது. இத்துடன் இந்தப் பயங்கரவாத நாடகத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.தேவநாகிரியைச் சேர்ந்த 26 வயது நிரம்பிய டாக்டர் நயீம் ஸித்தீக்கி என்பவர் டெல்லியிலிருந்து பெங்களூர் வரும்பொழுது கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார் என்று போலீஸ் கூறுகிறது. அவர் டெல்லியில் காது, மூக்கு,
தொண்டை பிரிவில் மேற்படிப்பு படித்துக்கொண்டிருக்கிறார்.
“ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு டாக்டர் ஸித்தீக்கி நிதியுதவி முதல் அனைத்து உதவிகளும் செய்துள்ளார். இந்தக் குழுவுக்கு அவர் ஆட்களையும் சேர்த்துள்ளார்” என்று பெங்களூர் மாநகரக் காவல்துறை ஆணையர் பி.ஜி. ஜியோதி பிரகாஷ் மிர்ஜி கூறியுள்ளார். ஒரு பத்திரிகையாளர், ஒரு மருத்துவர், ஒரு டிஆர்டிஓ இளம் ஆராய்ச்சி மாணவர் உட்பட கைது செய்யப்பட்டுள்ள 13 பேருடன் ஸித்தீக்கி தொடர்பு வைத்திருந்தார் என்றார் ஆணையர்.
ஒரு லேப்டாப், ஒரு கைபேசி, ரூ. 10,000 ரொக்கப் பணம் ஆகியவை அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார்.
“2008ல் ஹூப்ளியிலும், அதன் சுற்றுப்புறத்திலும் சிமியைப் பரப்பியதில் ஸித்தீக்கிக்கு தொடர்பிருக்கிறதா என்று நாங்கள் விசாரணை செய்து வருகின்றோம். சிமி அமைப்பு தடை செய்யப்பட்டவுடன் இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு உருவானது. அதனோடு ஸித்தீக்கிக்கு தொடர்பிருக்கிறதா என்று விசாரணை நடக்கிறது” என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லேப்டாப், கைபேசி இவைகளெல்லாம் இன்று அன்றாடம் பயன்படுத்தப்படும் சாதாரண பொருட்களாகிவிட்ட நிலையில் இவற்றைப் பெரிய பயங்கரவாத ஆயுதங்களாகக் கைப்பற்றியுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது அனைவரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது. டெல்லியிலிருந்து பெங்களூருக்குப் பயணம் செய்பவர் கையில் 10,000 ரூபாய் பணம் இருப்பது ஒரு குற்றச் செயலா என்ற எண்ணமும் எழாமல் இல்லை.
வெறும் வாய்க்கு அவல் கிடைத்த மாதிரி ஊடகங்கள் இந்தக் கைது நாடகத்தை வைத்து பலப் பல கதைகளை அவிழ்த்து விடுகின்றன. இவர்களுக்கு சவூதி அரேபியாவிலுள்ள இரண்டு மர்ம நபர்களுடன் தொடர்பிருப்பதாகவும், அவர்களுடன் இவர்கள் ஸ்கைப்பிலும், இதர இணையதளங்கள் மூலமும் தொடர்பு கொண்டு பேசுவதாகவும், அந்த இருவரில் ஒருவர் லஷ்கரே தய்யிபாவைச் சேர்ந்தவர் என்றும், இன்னொருவர் ஹுஜியைச் சேர்ந்தவர் என்றும் சந்தேகிக்கப்படுவதாகவும் பல கதைகள் வெளியாகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக