செவ்வாய், செப்டம்பர் 18, 2012

உதயக்குமாருக்கு என்கவுகண்டரா??.. கூடங்குளத்தைச் சுற்றி வரும் திகில் பீதி !

 Police Get Ready Catch Udayakumar At Gun Point கூடங்குளம்: அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், கூடங்குளம் போராட்டததை முனைப்புடன் நடத்தி வருபவருமான உதயக்குமாரை போலீஸார் என்கவுண்டர் மூலம் போட்டுத் தள்ளப் போகிறார்கள் என்று பரவி வரும் தகவலால் கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் பரபரப்பு நிலவுகிறது. கூடங்குளம் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருவதை அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. இடையில் தொய்வடைவது போல தெரிந்த
இப்போராட்டம் தற்போது முன்பை விட வேகமாக நடந்து வருவதால் ஆட்சியாளர்களும், காவல்துறையிரும் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர் என்பதே உண்மை.
கூடங்குளம் அணு மின் நிலையம் அருகே நடந்த முற்றுகைப் போராட்டத்தை கலைத்து முறியடித்து விட்டாலும் கூட தொடர்ந்து கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட கிராமங்களில் பதட்டம் நிலவிக் கிடப்பதைக் கண்கூடாக காண முடிகிறது.
இந்த நிலையில் போராட்டக் குழுத் தலைவர்களான உதயக்குமார், புஷ்பராயன், மைபா சேசுராஜ் உள்ளிட்டோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர்களைப் பிடித்தால், அத்தனைப் பிரச்சினைகளுக்கும் முடிவு கட்டி விடலாம் என்று போலீஸார் முனைப்புடன் தேடி வருகின்றனர். ஆனால் அவர்களை கிராம மக்கள் படு பத்திரமாக ஒளித்துள்ளனர். இந்த அரணைத் தாண்டி போலீஸாரால் போக முடியாத நிலை காணப்படுகிறது.
போலீஸாரிடம் சரணடையப் போவதாக உதயக்குமார் கூறினாலும் அதை கிராம மக்கள், போராட்டக் குழுவினர் ஏற்கவில்லை. சரணடைவதற்காக வந்த அவரை அப்படியே குண்டுக்கட்டாக தூக்கி படகில் போட்டு கடலுக்குள் கொண்டு போய் தற்போது மறைவிடத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர் கிராமத்தினர்.
இந்த நிலையில்தான் உதயக்குமாரை சுட்டுப் பிடிக்கவும் போலீஸார் தயாராக இருப்பதாகவும், என்கவுண்டர் நடத்தப்படலாம் என்றும் தகவல் பரவியுள்ளது. இதை நம்பாமலும் இருக்க முடியவில்லை. காரணம், தேவைப்பட்டால் உதயக்குமாரை சுட்டுப் பிடிக்க அனுமதி தருமாறு மேலிடத்திற்கு காவல்துறை சார்பில் கோரிக்கை போயுள்ளதாம். அனுமதி கிடைத்தால் பெரும் போலீஸ் படையுடன் திமுதிமுவென புகுந்து கிராமத்தினரை கலைத்து விரட்டி விட்டு, துப்பாக்கி முனையில் உதயக்குமாரை கைது செய்யும் திட்டத்தில் போலீஸார் உள்ளனராம். இதற்காக சிறப்புப் படையே கூட தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேசமயம், இப்படி எந்தத் திட்டமும் இல்லை என்று காவல் துறை வட்டாரத்தில் மறுத்துக் கூறுகிறார்கள். ஆனால் இந்தத் தகவல் பரவியதால் தற்போது கூடங்குளம், கூத்தங்குழி, இடிந்தகரை மக்கள் மேலும் டென்ஷனாகியுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக