சிவகாசி: சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டியில் உள்ள ஓம் சக்தி பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 54 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. விருதநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டியில் உள்ளது ஓம் சக்தி பயர் ஒர்க்ஸ் நிறுவனம். அந்த நிறுவனத்தில் 40 அறைகளில் தயாரிக்கப்பட்ட
பட்டாசுகளும், பட்டாசுகளுக்கான வெடி பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன.
இந் நிலையில் இன்று பிற்பகலில் திடீர் என்று ஒரு அறையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறையே வெடித்து தரைமட்டமானது. அதிலிருந்து பரவிய தீ மளமளவென் அடுத்ததடுத்த அறைகளுக்கும் பரவியதில், அங்கிருந்த பட்டாசுகளும், வெடி மருந்துகளும் வெடித்துத் சிதறின.
இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெரும் சத்தத்துடன் அந்த தொழிற்சாலையே வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தது. இதனால் அந்த பகுதியில் புகை மண்டலமாக காட்சியளித்தது. அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினரும் வருவாய்த் துறையினரும், ஆம்புலன்ஸ்களும் அந்த தொழிற்சாலை அருகே கூட செல்ல முடியவில்லை. அவ்வளவு சக்தியோடு பெரும் சத்ததோடு வெடிப்புகள் நடந்தன. பட்டாசு ஆலையில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினரும் குழந்தைகளும் வெளியே நின்று கொண்டு தலையிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதனர். சுமார் 20 பேர் மயங்கி விழுந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
விருதுநகர், சிவகாசி, சாத்தூரில் இருந்து வந்த 10 தீயணைப்பு வண்டிகளும் 60க்கும் மேற்பட்ட வீரர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்துக்குப் பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
விபத்தில் இதுவரை 54 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றச் சென்ற பலரும் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் விருதுநகர், சிவகாசி மருத்துவமனைகளிலும், பலத்த காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை நெருக்கமாக படம் எடுக்கச் சென்ற ஜீ டிவியின் நிருபர் வைத்தி படுகாயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த தீ விபத்தில் அந்த ஆலையின் 40 அறைகளும் வெடித்துச் சிதறி தரைமட்டமாகிவிட்டன. இந் நிலையில் விபத்து நடந்த இடத்தைச் சுற்றி 3 கி.மீ. தூரத்துக்கு யாரும் செல்ல வேண்டாம் என தீயணைப்புத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இந் நிலையில் சம்பவம் நடந்த இடத்துக்கு 5 அமைச்சர்கள் விரைந்துள்ளனர். நாளை முதல்வர் ஜெயலலிதாவும் அங்கு செல்வார் என்று தெரிகிறது.
சிவகாசியில் நடந்த தீ விபத்துகளிலேயே இது தான் மிகவும் மோசமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக