சென்னை: அநாதரவாக விடப்பட்டுள்ள ஈமு கோழிகளுக்கு தேவையான தீவனம் வழங்கும் வகையில் கால்நடைத்துறைக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஈமு கோழி வளர்ப்பில் ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஈமு கோழிப் பண்ணைகளில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று கூறி, பொதுமக்களிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை
வைப்பு நிதியாக சில ஈமு கோழி பண்ணை நிறுவனங்கள் திரட்டின. இவ்வாறு பொதுமக்கள் முதலீடு செய்த தொகைக்கு ஈடாக அவர்களுக்கு ஈமு கோழிகள் கொடுக்கப்பட்டு அதை முதலீட்டாளர்கள் அவர்களது பண்ணையில் வளர்க்க வேண்டும். அதற்கென ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். குறிப்பிட்ட காலத்திற்கு பின் வைப்புத் தொகை திரும்ப வழங்கப்படும். ஈமு கோழிகளை வளர்க்க இடமில்லாதவர்களைப் பொறுத்த வரையில், பண்ணை நிறுவனங்களே ஈமு கோழிக் குஞ்சுகளை வளர்த்து மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையினை முதலீட்டாளருக்கு வழங்கி, குறிப்பிட்ட காலத்திற்குப் பின் முதலீட்டுத் தொகை திரும்ப வழங்கப்படும் என்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தன.
ஆனால் கடந்த மாதம் முதல் ஈமு கோழி பண்ணைகளை நடத்தும் பல நிறுவனங்கள், முதலீட்டாளர்களுக்கு சேர வேண்டிய மாதத் தவணைத் தொகையை வழங்காததால், முதலீட்டாளர்கள் தங்களது வைப்புத் தொகையை திருப்பி அளிக்கும்படி கோரினர். இது தொடர்பாக சில ஈமு பண்ணை நிறுவனங்களின் மீது புகார்கள் காவல்துறையினரால் பெறப்பட்டுள்ளன. இவை மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் ஏற்கனவே உத்திரவிட்டதுடன், நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, வைப்புதாரர்களுக்கு உரிய தொகை திரும்ப வழங்குவதற்கு முனைப்பான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் ஆணையிட்டுள்ளார்.
மேலும், பண்ணை நிறுவனர்கள் தலைமறைவாகிவிட்ட காரணத்தினாலும், பண்ணைகளில் பணிபுரிந்தவர்களும் திடீரென சென்று விட்டக் காரணத்தினாலும், ஈமு கோழிகள் சரியான உணவின்றி இறக்கும் சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து, அந்தக் கோழிகளை பேணிப் பாதுகாக்க கால்நடைத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து, ஈமு கோழிகளுக்குத் தேவையான தீவனம் வழங்கும் வகையில் கால்நடைத்துறைக்கு 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக