வியாழன், மே 03, 2012

அதிபர் தேர்தல்:முன்னாள் இஃவான் உறுப்பினருக்கு ஸலஃபிகள் ஆதரவு!

கெய்ரோ:தாயாருக்கு அமெரிக்க குடியுரிமை இருப்பதால் எகிப்து அதிபர் தேர்தலில் போட்டியிட ஹாஸிம் அபூ இஸ்மாயிலுக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஸலஃபிகள் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இஃவானுல் முஸ்லிமீன் வேட்பாளர் அப்துல் முனீம் அப்துல் ஃபதாஹை ஆதரிக்க முடிவுச் செய்துள்ளனர்.

இஃவானுல் முஸ்லிமீனின் செயல்பாடுகளில் வெளிப்படையான தன்மை இல்லை என்று குற்றம் சாட்டி அப்துல் முனீம் அதிபர் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறார். ஆனால், அவருக்கு கத்தர் பாஸ்போர்ட் இருப்பதாக கூறி ராணுவம் எதிர்ப்பு தெரிவிக்கிறது.
இஃவானுல் முஸ்லிமீனின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கைராஜ் அல் ஷாத்திர், முன்பு வழக்கு ஒன்றில் தண்டனை அனுபவித்ததை சுட்டிக்காட்டி தேர்தல் கமிஷன் அவருக்கு போட்டியிட அனுமதி மறுத்தது.
அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் ஷாத்திரை தண்டித்தது முன்னாள் முபாரக் சர்வாதிகார அரசு. ஷாத்திருக்கு தடை விதிக்கும் ராணுவ அரசின் திட்டத்தை புரிந்துகொண்டு இஃவானுல் முஸ்லிமீன், முஹம்மது முர்ஷியை மாற்று வேட்பாளராக அறிவித்தது.
அரபு லீக்கின் முன்னாள் பொதுச்செயலாளர் அம்ர் மூஸா இஃவான் வேட்பாளருக்கு போட்டியை ஏற்படுத்துவார் என கருதப்படுகிறது. இஸ்ரேல் எதிர்ப்பு அறிக்கைகளை விடுத்து பிரபலமான அம்ர் மூஸா, தேசியவாதிகளையும், மதசார்பற்றவாதிகளையும் ஈர்ப்பார் என கருதப்படுகிறது.
முபாரக்கின் ஆட்சியின் கடைசி காலக்கட்டத்தில் பிரதமராக பதவி வகித்த அஹ்மத் ஷஃபீக்கிற்கு ராணுவத்தின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.
அப்துல் முனீம் அப்துல் ஃபதாஹ் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது இஃவானுல் முஸ்லிமீனின் வாக்குகளை சிதறிக்கும் என கருதப்படுகிறது.  இஃவான்களின் இளைஞர் பிரிவு இறுதிக்கட்டத்தில் அப்துல் முனீமிற்கு ஆதரவு அளித்துவிடுமோ என்ற கவலையும் இஃவானுல் முஸ்லிமீனிற்கு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக