வியாழன், மே 03, 2012

உயிருக்குப் போராடும் உண்ணாவிரதப் போராளிகள் !

 அல் ஹலீல்: பலஸ்தீன் உண்ணாவிரதப் போராளி பிலால் தியாப், உடல்நலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (01.05. 2012) ரம்லே சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து அஸ்ஸாஃப் ஹரொஃபீஹ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். 
தற்போது மேற்படி பலஸ்தீன் கைதி "கோமா" நிலையை அடைந்துள்ளார் என பலஸ்தீன் கைதிகள் சங்கத்தின் வழக்குரைஞர் ஜவாத் பௌலூஸ் தெரிவித்துள்ளார்.

ஜெனின் பிராந்தியத்தின் கஃப்ர் ராய் கிராமத்தைச் சேர்ந்த 27 வயது பலஸ்தீன் இளைஞரான தியாப், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் எந்தவித நியாயமான காரணமும் இன்றி அடாவடியாகக் கைதுசெய்யப்பட்டார். அவ்வாறே, எத்தகைய விசாரணைகளும் மேற்கொள்ளப்படாத நிலையில், தொடர்ந்தும் இஸ்ரேலியச் சிறை நிர்வாகத்தின் மனிதாபிமானமற்ற கெடுபிடிகளையும் துன்புறுத்தல்களையும் எதிர்கொண்டு வந்தார்.

இந்நிலையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகத்தின் மனித உரிமை மீறல்களுக்கும் தமக்கெதிரான அடக்குமுறைகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து, நியாயமான அடிப்படை உரிமைகளைக் கோரி, ஏனைய பலஸ்தீன் கைதிகளைப் போலவே தியாபும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 

பலஸ்தீன் கைதிகளுக்கு எத்தகைய உரிமைகளோ சலுகைகளோ வழங்கப்படக் கூடாது என்பதில் பிடிவாதமாய் இருந்த ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகம், இவர்களின் சாத்வீகமான உண்ணாவிரதப் போராட்டத்தை முறியடிக்கும் முனைப்பில் தொடர்ந்தும் பல்வேறு நெருக்குதல்களைக் கொடுத்துவந்தது. துன்புறுத்தல்கள், தனிமைச் சிறை, அடிப்படை வசதிகளை முற்றாக இடைநிறுத்துதல், உரிய மருத்துவப் பராமரிப்போ, மருந்துகளோ வழங்கப்படாமை என்பன அவற்றுள் சிலவாகும்.

இவ்வாறான அனைத்துவித அழுத்தங்களுக்கும் இசைந்துகொடுக்காமல், தமக்கு நியாயமான உரிமைகள் வழங்கப்படும்வரை போராடும் அசையாத உறுதியோடு, 66 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்டிருந்த தியாப், தற்போது கோமா நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கின்றார். இவரோடு உள்ள தாஹிர் ஹலாஹ்லேயின் உயிரும் ஊசலாடிக்கொண்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அனேகமான பலஸ்தீன் உண்ணாவிரதப் போராட்டக் கைதிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது. அவர்களில் பலர் இரத்த வாந்தி எடுத்துவருகின்றனர் என்பது கவனத்திற் கொள்ளத்தக்கது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகத்தின் அராஜகங்களுக்கு எதிராய்ப் போராடிவரும் பலஸ்தீன் உண்ணாவிரதப் போராளிகள் விடயத்தில் துரித முன்னெடுப்புகளை மேற்கொண்டு, அவர்களின் உயிர்காக்க முன்வருமாறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களை நோக்கி பலஸ்தீன் மக்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக