புதுடெல்லி:பாராளுமன்ற உறுப்பினர்களை கேவலமாக விமர்சித்த ஹைடெக் யோகா சாமியார் பாபா ராம்தேவிற்கு பாராளுமன்றத்தில் கட்சி வேறுபாடின்றி அனைத்து எம்.பிக்களும் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். சட்டீஸ்கர் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய ராம்தேவ், “எம்.பி.க்கள் எதிலும் அக்கறையில்லாதவர்கள்.
விவசாயிகளையும், தொழிலாளர்களையும், நாட்டு மக்களையும் நேசிக்காதவர்கள்’ என்று கடுமையாக குற்றம் சாட்டினார்.
“அவர்கள் பணத்துக்கு அடிமைகளாகவும், நண்பர்களாகவும் உள்ளனர். நாம் தேர்ந்தெடுத்த எம்.பி.க்கள் மனித உருவில் வாழும் பிசாசுகள். அவர்களுக்கு தகுதி கிடையாது.
நாடாளுமன்றத்தில் நல்லவர்களும் உள்ளனர். அவர்களை நான் மதிக்கிறேன். அவர்களில் கல்வியறிவற்றவர்களும், கொள்ளையர்களும், கொலைகாரர்களும் உள்ளனர். எனவே நாம் நாடாளுமன்றத்தை பாதுகாக்க வேண்டும். ஊழல்வாதிகளை நீக்க வேண்டும்’ என்று கடுமையாக பேசினார் ராம்தேவ்.
ஏற்கனவே அன்னா ஹஸாரே குழுவைச்சார்ந்த கேஜ்ரிவால் பாராளுமன்ற உறுப்பினர்களை கேவலமாக பேசி கண்டனத்திற்கு ஆளானார்.
ராம்தேவின் கருத்திற்கு மக்களவைத் தலைவர் மீராகுமார், பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட எம்.பி.க்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். “அரசியல் சாசன சட்டமே மேலானது. அது நாடாளுமன்றத்துக்கு என்று தனி அந்தஸ்து வழங்கியுள்ளது. அதை நாம் முதலில் கட்டிக்காக்க வேண்டும்” என்று மீரா குமார் தெரிவித்தார்.
“நாடாளுமன்றத்தையும், சட்டம் இயற்றுபவர்களையும் விமர்சிப்பது சாதாரணமாகிவிட்டது. யார் அதிகமாக அவமதிக்கிறார்களோ அவர் பெரிய ஹீரோ ஆகிறார். இது முற்றிலும் தவறு. ஜனநாயக நிறுவனங்களை விமர்சிக்க யாருக்கும் அதிகாரமில்லை. அவர் எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் சரிதான்” என்றார் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா.
“எம்.பி.க்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக பாபா ராம்தேவ் மீது நாடாளுமன்ற உரிமை மீறல் பிரச்னையின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மக்களவையில் உறுப்பினர்கள் புதன்கிழமை வலியுறுத்தினர்.
“பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்துவோரால் நாடாளுமன்றத்தின் இறையாண்மை பாதிக்கப்படுகிறது. அவர்கள் (ராம்தேவ் பெயரைக் குறிப்பிடவில்லை) மீது நாடாளுமன்ற உரிமைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான நோட்டீசைக் கொடுத்துள்ளேன்” என்று சமாஜவாதி கட்சி உறுப்பினர் சைலேந்திர குமார் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஜெகதாம்பிகா பால், “ராம்தேவின் பேச்சால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மதிப்பு சமுதாயத்தில் கெடுகிறது. அவர் மீது அவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
அப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த காங்கிரஸ் மூத்த உறுப்பினர் பி.சி. சாக்கோ, “உறுப்பினர்களின் உரிமை மீறல் நோட்டீஸ் அனைத்தும் மக்களவைத் தலைவரின் பரிசீலனையில் உள்ளது. அவர் முடிவு எடுக்கும்வரை காத்திருக்க வேண்டும்” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக