வியாழன், மே 03, 2012

சிமி தடைக்கு முந்தைய இயக்கங்கள் அதன் முன்னணி அமைப்புகள்! – மத்திய உள்துறை அமைச்சகம்!

புதுடெல்லி:இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம்(சிமி) தடைச் செய்யப்படுவதற்கு முன்னர் இந்தியாவில் இயங்கிய இயக்கங்கள் அதன் முன்னணி அமைப்புகள் என்றும், சிமி தடைச் செய்யப்பட்ட பிறகும் இவ்வமைப்புகளின் மூலமாக சிமி இயங்குவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேக் க்ரவுண்ட் அறிக்கை கூறுகிறது.

கைரே உம்மத் ட்ரஸ்ட், தஹ்ரீக் ஹிஸாயாயே உம்மத், தஹ்ரீக் தலபாயே அரபிய்யா, தஹ்ரீக் தஹ்ஃபூஸா ஷரீஆ ஆகிய இயக்கங்களை மத்திய உள்துறை அமைச்சகம் சிமியின் முன்னணி அமைப்புகளாக சித்தரித்துள்ளது. ஆனால், இவ்வமைப்புகள் தடைச் செய்யப்படவில்லை.
இதில் கைரே உம்மத் ட்ரஸ்ட், சில தினங்களுக்கு முன்பு மும்பையில் ஆல் இந்தியா முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் இரண்டு நாள் கருத்தரங்கிற்கு ஏற்பாடுச் செய்தது.
கைரே உம்மத் ட்ரஸ்டை சிமியின் முன்னணி அமைப்பாக சித்தரிக்கும் போக்கை கண்டித்து சிமியின் தடையைக் குறித்து விசாரணை நடத்தும் நீதிபதி ஷாலி தீர்ப்பாயத்தை அணுகுகிறார் கைரே உம்மத் ட்ரஸ்டின் பொதுச்செயலாளர் ஹாரூன் மூஸாவாலா.
சிமி உறுப்பினர்கள் இதர முஸ்லிம் அமைப்புகளுடன் உறவை ஏற்படுத்தி அரசியல் கட்சிகளில் நுழைந்து தடையை நீக்க அரசுக்கு நிர்பந்தம் அளிப்பதாக கட்சிகள் மற்றும் தனிநபர்களின் பெயர்களை குறிப்பிடாமலேயே அரசு குறிப்பு குற்றம் சாட்டுகிறது.
மூன்று டஜனுக்கு மேலான சிமியின் முன்னணி அமைப்புகளில் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் முக்கிய இடத்தை வகிக்கும் கைரே உம்மத் ட்ரஸ்ட் மாநிலத்தில் சிமியின் அமைப்புகளை ஒருங்கிணைத்து நிதியை சேகரிப்பதாகவும், பணிகளுக்கு தலைமை தாங்குவதாகவும் அரசு குறிப்பு குற்றம் சாட்டுகிறது.
ஆனால், இக்குற்றச்சாட்டுக்களை கைரே உம்மத் ட்ரஸ்டின் பொதுச் செயலாளர் ஹாரூன் மூஸாவாலா மறுத்துள்ளார். 1998-ஆம் ஆண்டு முதல் அடிப்படை வசதிகளும், உரிமைகளும் மறுக்கப்பட்டவர்களுக்காக சுகாதார, கல்வி துறைகளில் பணியாற்றி வரும் ஜீவகாருண்ய அமைப்புதான் தங்களுடையது என்று மூஸாவாலா கூறுகிறார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் குற்றச்சாட்டுக்களை முஸ்லிம் தனியார் சட்டவாரியம் மறுத்துள்ளது. உளவுத்துறை ஏஜன்சிகள் தங்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும், இதன் தூண்டுதல் யார் என்று தெரியவில்லை என்றும் முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் பொதுச்செயலாளர் அப்துல் ரஹீம் குரைஷி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக