செவ்வாய், மே 08, 2012

கூடங்குளம் போராட்ட குழுவுடன் அரசு பேச்சு நடத்த வேண்டும்: சீமான் கோரிக்கை

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து கடந்த 9 மாதங்களாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். 340-க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 8 நாட்களாக காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் நூற்றுக்கணக்கான பெண்களும் உள்ளனர்.
 
பட்டினிப் போராட்டம் நடத்தி வரும் அவர்களின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இதற்கு மேலும் இப்பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் மவுனம் சாதிப்பது நியாயமற்றதாகும்.
 
கூடங்குளம் அணுமின் நிலையங்கள் அமைந்துள்ள பகுதியின் புவி அமைப்பு, நீரியல், நிலநடுக்க அபாயம், அணு உலைகளின் செயல்பாட்டால் அப்பகுதியில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஆகியனபற்றி சுதந்திரமான நிபுணர் குழுக்களை அமைத்து ஆய்வு செய்திடல் வேண்டும் என்பதே அவர்களின் மிக முக்கியமான கோரிக்கையாகும்.
 
எனவே கூடங்குளம் பகுதி மக்களின் அச்சத்தைப் போக்குவோம் என்று உறுதியளித்த மத்திய, மாநில அரசுகள், அவர்களின் நியாயமான இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியளிக்க வேண்டும்.
 
அணுசக்திக்கு எதிரான மக்கள் போராட்டக் குழுவினருடன் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளிக்க வேண்டும்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக