வெள்ளி, மே 11, 2012

தென் மாநிலங்களில் நக்சலைட்டு தீவிரவாதம் ஊடுருவல்: மத்திய மந்திரி தகவல்

இடது சாரி தீவிரவாதம் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் காலூன்றி வருவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. உள்துறை இணை மந்திரி ஜிதேந்திரா சிங், டெல்லி மேல்-சபையில் அறிக்கை சமர்பித்து பேசியதாவது:- 
கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய தென்-மாநிலங்களில் தங்களது அமைப்புகளை இடது சாரி தீவிரவாதிகள் (மாவோயிஸ்டு நக்சல்கள்) விரிவுபடுத்தி வருகின்றனர். இந்த மாநிலங்களில், வன வழித்தடங்களை ஏற்படுத்த மாவோயிஸ்டுகளின் தென் மேற்கு மண்டல அமைப்பு திட்டமிட்டுள்ளது. 

கர்நாடக மாநிலத்தில், தக்ஷின கன்னடம், உடுப்பி, ராய்ச்சூர் மற்றும் பெல்லாரியில் நக்சல்கள் பத்து ஆண்டுகளுக்கு மேலாக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்தாண்டு மார்ச் மாதம், மங்களூர் மாவட்டத்தில், பெல்தாங்கடி என்ற பகுதியில் 10 நக்சல் முகாம்களை, கர்நாடக போலீசார் தாக்கி அழித்தனர். 

தீவிரவாத குழுக்கள் கர்நாடக - கேரளா எல்லையில் தங்களது தளத்தை அமைக்க முயன்று வருகின்றனர். கேரளாவில் செயல்பட்டு வரும் மாவோயிஸ்டுகள், வயநாடு மாவட்டத்தில் இருந்து கர்நாடகாவின் மைசூர் மாவட்டம் வரை வனப்பகுதி வழித்தடத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். 

இது இந்த மாநிலங்களில் மாவோ பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் படிப்படியாக அதிகரித்து வருவதற்கு ஆதாரமாக உள்ளன. இந்த முயற்சிகளை முறியடிக்குமாறும், இடது சாரி பயங்கரவாதம் காலுன்றுவதை ஆரம்ப நிலையிலேயே தடுக்குமாறும், மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 

இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக