வெள்ளி, மே 11, 2012

அம்பேத்கர் குறித்த சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கார்ட்டூனால் நாடாளுமன்றத்தில் அமளி!

புதுடெல்லி:சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள அம்பேத்கர் குறித்து கார்ட்டூனால் நாடாளுமன்றத்தில் இன்று கடும் அமளி ஏற்பட்டு அவை  ஒத்திவைக்கப்பட்டது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை,  என்சிஇஆர்டி எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில்  (National Council Of Educational Research And Training-NCERT)  தயாரித்துள்ளது.

அது தயாரித்து அளித்த 11 வது வகுப்பு மாணவர்களுக்கான அரசியல் விஞ்ஞான  (பொலிட்டிகல் சயின்ஸ்) பாடப் புத்தகத்தில்,பாபா சாகிப் அம்பேதகர் குறித்த கார்ட்டூன்  ஒன்று இடம்பெற்றுள்ளது.
அந்த கார்ட்டூன்,இந்தியாவின் அரசியல் சாசனத்தை தயாரிக்கும் பணி நடைபெற்றபோது,  அது மிக மெதுவாக நடைபெற்று வந்ததாகவும், இதற்காக அம்பேத்கர் 3 ஆண்டுகள்  எடுத்துக்கொண்டார் என்பது போன்றும் அர்த்தம் தொனிக்கும் வகையில்  வரையப்பட்டுள்ளதோடு, அரசியல் சாசனம் என்ற நத்தை மீது அம்பேத்கர் அமர்ந்திருப்பது  போன்றும், அந்த நத்தையை வேகமாக செல்ல வைப்பதற்காக இந்தியாவின் முதல்  பிரதமர் ஜவஹர்லால் நேரு, அதனை சவுக்கால் அடிப்பது போன்றும் அதில்  சித்தரிக்கப்பட்டுள்ளது.
இது அம்பேத்கரை இழிவுப்படுத்துவது போன்று உள்ளதாக கூறி பல்வேறு தலித்  அமைப்புகள் ஏற்கனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்ததோடு, அந்த கார்ட்டூனை அப்பாட  புத்தகத்திலிருந்தும் நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை அவை கூடியதும், விடுதலை சிறுத்தைக் கட்சித் தலைவர்  திருமாவளவன் அவையின் மையப் பகுதிக்கு சென்று, என்சிஇஆர்டி தயாரித்த  பாடப் புத்தகத்தில் அம்பேதகர் இழிவுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி, அது தொடர்பான  வாசகங்கள் அடங்கிய அட்டையை கையில் பிடித்தபடி பிரச்னை எழுப்பினார்.
அவருக்கு ஆதரவாக மேலும் பல உறுப்பினர்களும் குரல் கொடுத்ததால், அவையில் கடும்  அமளி நிலவியது.
இந்த களேபரத்தால் அவையை தொடர்ந்து நடத்த முடியாத நிலை  ஏற்பட்டதால், அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை கூடிய பின்னரும் அதே  நிலை நீடித்ததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே மாநிலங்களவையிலும் இதே பிரச்னை காரணமாக அவை மதியம் 2 மணி  வரை ஒத்திவைக்கப்பட்டது.
மன்னிப்புக் கோரிய அமைச்சர்!
இதனிடையே குறிப்பிட்ட அந்த கார்ட்டூன் பிரச்னை குறித்து  மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பதிலளித்துப் பேசிய மத்திய மனிதவள  மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், இந்த கார்ட்டூன் வெளியிடப்பட்ட 2006-ம்  ஆண்டு தாம் அமைச்சராக இல்லாதபோதிலும், தாம் அதற்காக மன்னிப்பு கோருவதாக  தெரிவித்தார்.
ஆட்சேபகரமான அந்த கார்ட்டூனை பாடப் புத்தகத்திலிருந்து நீக்க தாம்  உத்தரவிட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்கள் இடம்பெறாதவாறு  பார்த்துக்கொள்ளப்படும் என்று தாம் உறுதி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக