செவ்வாய், மே 08, 2012

தற்கொலைக்கு எதிராக பிரசாரம் செய்த இந்தியர் தூக்கிட்டு தற்கொலை

துபாய்: ஷார்ஜாவில் தற்கொலைக்கு எதிராகப் பிரசாரம் செய்து வந்த கேரளாவைச் சேர்ந்த சமூக சேவகர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.கேரளாவைச் சேர்ந்தவர் சுகதன்,61. இவர் ஷார்ஜாவில் "எக்ஸ்-ரே' டெக்னீஷியனாக வேலை பார்த்து வந்தார். 37 ஆண்டுகளாக ஐக்கிய அரபு எமிரேட்டில் வேலை பார்த்து வந்த சுகதன், வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்கும் வகையில், பிரசாரம் செய்து வந்தார். ஷார்ஜாவில் உள்ள இந்தியர்கள் சங்கத்தின் செயலராக இவர் இருந்தார். பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டதற்காக, கடந்த ஆண்டு இவர் கவுரவிக்கப்பட்டார்.இந்நிலையில், கடந்த மாதம் 29ம்தேதி பணிக்குச் செல்லாமல் விடுப்பு எடுத்து கொண்டு, புஜய்ரா என்ற இடத்திற்கு காரில் சென்றார். அங்கு கட்டப்பட்டு வரும் ஒரு கட்டடத்தில் இவர், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தூக்கிட்டுக் கொள்வதற்காக இவர் கயிறு வாங்கியதற்கான ரசீது அவர் சட்டைப் பையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.தற்கொலைக்கு எதிராகப் பிரசாரம் செய்து வந்த சுகதன், ஏன் இந்த விபரீத முடிவை மேற்கொண்டார் என்ற விவரம் தெரியவில்லை. கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக