செவ்வாய், மே 08, 2012

ஹிந்து பத்திரிகையின் ஹிந்துத்துவா மனோபாவம்!

ஹைதராபாத்:கடந்த மே மாதம் 3-ஆம் தேதி  தென்னிந்தியாவின் பிரபல பத்திரிகையான ‘தி ஹிந்துவின் ஆந்திர மாநில பதிப்பின் முதல் பக்கத்தில் மிக முக்கியத்துவத்துடன் வெளியான செய்தி பலரையும் குறிப்பாக ஹைதராபாத் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரு சாதாரண உள்ளூர் செய்தி பிரபலமான ‘தி ஹிந்து’ பத்திரிகையின் முன்பக்கத்தில் ‘Accusedalleged police torture’ என்று வெளியாகியிருந்தது.

ஹைதராபாத் பழையநகரில் முஸ்லிம்-இந்து கலவரத்தைத் தூண்ட ஹனுமான கோயிலில் மாட்டுக் கறியை வீசிய ஹிந்து வாஹினி என்ற ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்கள் என்.நாகராஜு என்பவர்  உள்பட 4 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். இதில்  என்.நாகராஜு என்பவர் போலீஸார் தன்னை சித்திரவதைச் செய்ததாக குற்றம் சாட்டிய செய்தியைத்தான் தி ஹிந்து தனது முதல் பக்கத்தில் வெளியிட்டு ஹிந்துத்துவா விசுவாசத்தை காட்டியுள்ளது.
‘தி ஹிந்து’வில் வெளியான இச்செய்தி ஒருதலைபட்சமான முறையிலும், போலீஸ் தரப்பில் இருந்து எவ்வித விளக்கத்தையும் பெறாமலேயே வெளியிடப்பட்டுள்ளது.
இச்செய்தியை படித்த முஸ்லிம்களுக்கு ஆச்சரியம். ஏனெனில் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக 150 முஸ்லிம் இளைஞர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் ஹைதராபாத் கலவர வழக்கிலும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பாரபட்சமாக கைது செய்யப்பட்டு சித்திரவதைச் செய்யப்பட்டனர். அப்பொழுதெல்லாம் இதனை முதல் பக்க செய்தியாகவோ, முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாகவோ வெளியிடாத ஹிந்து பத்திரிகை, குற்றவாளி தானே இக்குற்றத்தை செய்ததாக வாக்குமூலம் அளித்த வழக்கில் ஒருதலைபட்சமாக செய்தியை வெளியிட்டுள்ளதுதான் ஆச்சரியத்திற்கு காரணம் ஆகும்.
இதுக்குறித்து ஹைதராபாத்தை மையமாக கொண்டு இயங்கும் சிவில் லிபர்டீஸ் மானிட்டரிங் கமிட்டியின் பொதுச்செயலாளர் லத்தீஃப் முஹம்மது கான் கூறுகையில், ‘உண்மையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலீஸ் காவலில் வைத்து சித்திரவதைச் செய்யப்பட்டிருந்தால் நாங்கள் அதனை வன்மையாக கண்டிக்கிறோம். ஆனால், திஹிந்து இச்செய்தியை இந்த அளவுக்கு பரப்பரப்பான செய்தியாக வெளியிட்டிருக்க கூடாது. ஹைதராபாத்தில் முஸ்லிம் இளைஞர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து சித்திரவதைச் செய்யப்பட்டனர். அந்த செய்தியை ஏன் தி ஹிந்து பத்திரிகை இதேமுறையில் வெளியிடவில்லை?
இடதுசாரி தீவிரவாதத்தை எதிர்த்து போராடுகிறோம் என்ற பெயரில் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் போலீஸார் நடத்தும் அராஜகங்களை ஏன் இதே ரீதியில் தி ஹிந்து பத்திரிகை வெளியிடவில்லை?
ஹிந்து திடீரெனதனது பாலிசியைமாற்ற தூண்டியதுஎது? என்பதை குறித்து வாசகர்களுக்கு விளக்க கடமைப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ’வலதுசாரி தீவிரவாத அமைப்புகள் எந்த அளவு கட்டமைப்புடன் செயல்படுகின்றார்கள் என்பதற்கு இச்செய்தி ஓர் உதாரணமாகும். தங்களது உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டால் தமது முகத்தை மறைப்பதற்காக எதனையும் செய்ய அவர்கள் துணிந்து விடுகின்றார்கள்.
ஹிந்துவில் வெளியான செய்தி பொதுமக்களின் அனுதாபத்தை பெறும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து முக்கிய ஊடகங்களிலும் வலதுசாரி அமைப்பினர் ஊடுருவியுள்ளனர். இதில் ஹிந்துவும் விதிவிலக்கல்ல.’ என்று கூறினார்.
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களில் செய்யத் இம்ரான் கானும் ஒருவர் ஆவார். இவர் ஒரு பொறியியல் பட்டப்படிப்பு மாணவர். இவ்வழக்கில் பின்னர் இவர் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து நிரபராதி என விடுவிக்கப்பட்டார். அவர் ஹிந்து பத்திரிகையில் வெளியான செய்தி குறித்து கூறியது: ‘நான் கைது செய்யப்பட்ட பொழுது ஹிந்து உள்ளிட்ட அனைத்து முக்கிய ஆங்கில மற்றும் தெலுங்கு ஊடகங்கள் தீவிரவாதி கைது செய்யப்பட்டான்(விசாரிக்காமலேயே) என்று செய்தி வெளியிட்டன. நான் பல நாட்கள் போலீஸ் காவலில் வைத்து சித்திரவதைச் செய்யப்பட்டேன், இதனை நான் மாஜிஸ்ட்ரேட்டிடம் கூறினேன். ஆனால், இதனை எந்தவொரு முக்கிய ஊடகமும் செய்தியாக வெளியிடவில்லை. ஆனால், நான் விடுவிக்கப்பட்ட பொழுது 3 வரிகளில் செய்தியை ஊடகங்கள் வெளியிட்டன.
ஆனால், ஹிந்து பத்திரிகை நான் விடுதலையானதை கூட செய்தியாக வெளியிடவில்லை. ஊடகங்களின் இத்தகைய பாரபட்சமான போக்கு எனது வாழ்க்கையையும், வாய்ப்புகளையும் தகர்த்துவிட்டது. ஹிந்து பத்திரிகையின் முதல் பக்கத்தில் கடந்த மே 3-ஆம் தேதி வெளியான செய்தியை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். குற்றவியல் பின்னணியைக் கொண்ட ஹிந்துவாஹினி என்ற அமைப்பைச் சார்ந்தவர் சித்திரவதைச் செய்யப்பட்டதாக புகார் கூறும் செய்தியை ஹிந்து முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஆனால், எவ்வித குற்றப் பின்னணியும் இல்லாத பொறியியல் மாணவரான நான் சித்திரவதைச் செய்யப்பட்ட பொழுது 3 வரிகளில் கூட இச்செய்தியை ஹிந்து வெளியிடவில்லை.
அனைவரும் சொல்வார்கள், ஆங்கில மீடியாக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக மிகவும் தீவிரமாக பாரபட்சமாக நடந்துகொள்கிறது என்று. நான் அவர்கள் கூறுவது பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால், இச்செய்தியை பார்த்த பிறகு என்னைப் போன்ற முஸ்லிம்களுக்கு எதிராக மீடியாக்கள் நடந்துகொள்ளும் பாரபட்சத்தை நம்பும் நிலைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன்’ என்றார்.
டாக்டர் இப்ராஹீம் அலி ஜுனைத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களில் ஒருவர். இவர் கைது செய்யப்பட்டு போலீஸ் ஃபார்ம் ஹவுஸில் வைத்து பல நாட்கள் சித்திரவதைச் செய்யப்பட்டார். செய்யத் இம்ரான் கானைப் போலவே இவரும் தனக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளைக் குறித்து மாஜிஸ்ட்ரேட்டிடம் முறையிட்டார். ஆனால், இச்செய்தியை எந்த பத்திரிகைகளும் வெளியிடவில்லை.
அவர் கூறுகையில், ‘நாங்கள் போலீசாரால் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைச் செய்யப்பட்ட செய்தியை உருது ஊடகங்கள் வெளியிட்டன. அப்பொழுதும் ஆங்கில மீடியாக்கள், அந்த உருது மீடியாக்களை தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என அவமதித்தன.
நாங்கள் கைது செய்யப்பட்ட பொழுது போலீசாரின் கூற்றை நம்பி எங்களை தீவிரவாதிகள் என முடிச்செய்யும் வகையில் செய்திகள் வெளியானது. ஆனால், நாங்கள் விடுவிக்கப்பட்ட பொழுது ஹிந்து உள்ளிட்ட எந்த முக்கிய ஊடகமும் அச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
நாகராஜு ஒரு ஹிந்து மற்றும் ஹிந்து வாஹினி என்ற அமைப்பின் உறுப்பினர் என்பதால் அவர் தொடர்பான செய்தி முதல் பக்கத்தில் முக்கியத்துவத்துடன் ஹிந்துவில் வெளியானது. அவர் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால் 4-வது பக்கத்தில் 2 வரிகளில் செய்தியை முடித்து இருப்பார்கள்.’ என்றார்.
இச்செய்தி குறித்து ஹிந்துப் பத்திரிகை மழுப்பலான பதிலை தெரிவித்துள்ளது. ஆந்திர மாநில தி ஹிந்து பத்திரிகையின் முதன்மை அதிகாரி எஸ்.நாகேஷ் குமார் கூறுகையில், “நாங்கள் எந்த வலதுசாரி இயக்கம் அல்லது குழுவையும் எங்களை தவறாக பயன்படுத்த அனுமதிப்பதில்லை. எங்களுக்கு கிடைத்த செய்தியை முன்பக்கத்தில் வெளியிட்டோம்.
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்ட போதும் நாங்கள் செய்தி வெளியிட்டோம். ஆனால், அதுமுதல் பக்கத்தில் முக்கிய செய்தியாக வரவில்லை. ஆனால் அதனை ஆவணப்படுத்தியுள்ளோம். எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படையற்றது’ என்று தெரிவித்தார்.
ஹிந்துவில் வெளியான செய்திக் குறித்து ஹைதராபாத் கலவர வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக்குழு மற்றும் குற்றவியல் ஏ.சி.பி முஹம்மது அஹ்ஸன் ராஸா கூறுகையில், ‘இச்செய்தி அடிப்படையற்றது. நாங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் எவ்வித 3-ம் தர சித்திரவதைகளையும் வாக்குமூலம் பெற மேற்கொள்ளவில்லை. அவர்களே ஹனுமான் கோயிலில் மாட்டிறைச்சியை கலவரத்தை தூண்ட வீசியதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இதற்கு எங்களிடம் தெளிவான ஆதாரமும் உள்ளது. எனது குழுவினர் திறமையுடன் செயல்பட்டு பதட்டமான இவ்வழக்கில் முக்கிய ஆதாரத்தை கண்டுபிடித்துள்ளோம். ஆனால் சில ஆதிக்க சக்திகள் பொதுமக்கள் ஆதரவை பெறுவதற்காக மீடியா மூலமாக போலீசாருக்கு அவப்பெயரை உருவாக்க விரும்புகின்றனர்.’ என தெரிவித்தார்.
புலனாய்வுதுறை துணை போலீஸ் கமிஷனர் பி.விக்டர் கூறுகையில், ‘நாங்கள் வாக்குமூலம் பெற எவ்வித சட்டத்திற்கு புறம்பான முறைகளையும் பிரயோகிக்கவில்லை. நாங்கள் இக்குற்றச்சாட்டைக் குறித்து குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞருக்கும், தி ஹிந்து பத்திரிகைக்கும் நீதிமன்றத்தில் பதில் அளிப்போம்’ என்றார்.
நீதிமன்ற வளாகத்தில் முக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரிடம் பேட்டி மற்றும் புகைப்படம் எடுக்க போலீசார் எவ்வாறு அனுமதித்தனர் என்பது புதிராகவே உள்ளது. சிலர் இச்செய்திக் குறித்து கருத்து  தெரிவிக்கையில், போலீஸ் துறையில் உள்ள சிலரே ஹிந்துத்துவா வலதுசாரி உறுப்பினர்களுக்கு ஆதரவாக சித்து விளையாட்டு ஒன்றை நடத்தியிருக்கலாம்’ என்று சந்தேகிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக