புதுடெல்லி:ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்படும் அரசு மானியத்தை,10 ஆண்டுகளுக்குள் முற்றிலும் ரத்து செய்திட வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமியர்கள் தங்களது வாழ் நாளில் ஒரு முறையாவது ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது அவர்களது மார்க்க கடமைகளில் ஒன்றாகும்.
இதற்கான செலவினத்தில் குறிப்பிட்ட தொகையை அரசு அவர்களுக்கு மானியமாக வழங்குகிறது.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்படும் மானியத்தை படிப்படியாக குறைத்து,10 ஆண்டுகளுக்குள் அதனை முற்றிலும் ரத்து செய்திட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
சிறுபான்மையினத்தவர்களை கவருவதற்காக ஹஜ் பயணத்தை மத்திய அரசு அரசியலாக்கிவிட்டதாக சாடிய நீதிமன்றம்,புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அரசு மானியம் வழங்குவது சரியானதல்ல என்றும் கூறியது.
மேலும் ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்படும் மானியம் குறித்த விவரங்களையும்,மாநில ஹஜ் கமிட்டிகளுக்கு எந்த முறையில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன என்பது குறித்த விவரங்களையும் தாக்கல் செய்யுமாறும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக அரசு மானியத்துடன் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் முக்கிய பிரமுகர்களுக்கான ஒதுக்கீட்டில்,தனியார் சேவைதாரர்கள் மூலம் வருபவர்களையும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளுமாறு மும்பை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இதனை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான இன்றைய விசாரணையின்போதே,உச்ச நீதிமன்றம் மேற்கூறிய உத்தரவை பிறப்பித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக