கூடங்குளம்: கூடங்குளத்தில் உள்ள ஒரு லேத் பட்டறையில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர். ஆனால் கூடங்குளம் அணு மின் நிலையத்தில்தான் கேஸ்சிலிண்டர் வெடித்து விட்டதாக தகவல் பரவியதால் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
19 வயதான இசக்கி ராஜனும், 29 வயதான சிவக்குமாரும், கூடங்குளத்தில் உள்ல ஒரு லேத்தில் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டு தீவிபத்தில் சிக்கிப் படுகாயமடைந்தனர். உடனடியாக இருவரையும் கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமத்திற்குக் கொண்டு சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இந்த நிலையில் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து 2 தொழிலாளர்கள் படுகாயமடைந்ததாக தகவல் பரவியது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் இதை போலீஸார் மறுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அணு மின் நிலையத்தில் விபத்து எதுவும் நடக்கவில்லை. ஒரு லேத் பட்டறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்களின் கவனக்குறைவால் இந்த கேஸ் கசிவு ஏற்பட்டு விபத்து நடந்தது என்றனர்.
அதேசமயம், இந்த விபத்து குறித்து காயமடைந்துள்ள இரு தொழிலாளர்களும் வாய் திறக்க மறுத்து வருகின்றனராம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக