சனி, ஏப்ரல் 06, 2013

தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினராக எஸ்.சி.சின்ஹா நியமனம் !

பாரதிய ஜனதா கட்சியின் எதிர்ப்பையும் மீறி தேசிய புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ) தலைவர் எஸ்.சி.சின்ஹாவை மனித உரிமை ஆணைய உறுப்பினராக மத்திய அரசு நியமித்துள்ளது.


தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில் பிரதமர் மன்மோகன் சிங், மக்களவை தலைவர் மீரா குமார், மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன், மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக இருந்த சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் பி.சி.சர்மாவின் பதவிக் காலம் நிறைவடைந்ததை அடுத்து, அப்பதவியில் தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் எஸ்.சி.சின்ஹாவை நியமிக்க பிரதமர் உள்ளிட்டோர் வலியுறுத்தினர். ஆனால், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுஷ்மா ஸ்வராஜும், அருண் ஜேட்லியும் தனித்தனியே கடிதம் அளித்தனர். சுஷ்மா ஸ்வராஜ் தனது கடிதத்தில், "பெரும்பாலும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள்தான் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு ஆளாகின்றனர்.

 எனவே, மனித உரிமை ஆணையத்துக்கு சமூக ஆர்வலர்களை நியமிக்க வேண்டும்' என்று வலியுறுத்தியிருந்தார்.
இதை நிராகரித்த பிரதமர் உள்ளிட்ட மற்ற உறுப்பினர்கள், எஸ்.சி. சின்ஹாவை உறுப்பினராக நியமிக்கும் முடிவை ஆதரித்தனர். பெரும்பான்மை உறுப்பினர்களின் பரிந்துரையை ஏற்று, எஸ்.சி. சின்ஹாவை மனித உரிமை ஆணைய உறுப்பினராக நியமிப்பதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி காலத்தில், பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஒப்புதலை காரணம் காட்டி  பி.சி. சர்மாவை மனித உரிமை ஆணைய உறுப்பினராக நியமித்ததை இப்போதைய மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

59 வயதாகும் எஸ்.சி. சின்ஹா, ஹரியாணா மாநிலத்தில் 1975-ம் ஆண்டு  ஐ.பி.எஸ். அதிகாரியாகத் தனது பணியை தொடங்கினார். தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினராக அடுத்த 5 ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக