செவ்வாய், செப்டம்பர் 04, 2012

ராஜ்தாக்கரேயை அடக்க தவறும் மத்திய, மாநில அரசுகள் – நீதிஷ்குமார் குற்றச்சாட்டு !

ராஜ்தாக்கரேயை அடக்க தவறும் மத்திய, மாநில அரசுகள் - நீதிஷ்குமார்பாட்னா:பீகார் மாநிலத்தவருக்கு எதிராக வெறுப்பை உமிழும் மஹராஷ்ட்ரா நவநிர்மாண் சேனாவின்(எம்.என்.எஸ்) தலைவர் ராஜ் தாக்கரேவை அடக்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன என்று பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில், ராஜ்தாக்கரே பீகார் மாநிலத்தவரை மஹாராஷ்ட்ராவில் இருந்து வெளியேற்றுவோம் என்று வெறித்தனமாக பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி
தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) பாட்னாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிதீஷ்குமார்,  ராஜ்தாக்கரேயின் கருத்துக்கு பதிலளித்து கூறியது:
பீகார் மாநிலத்தவருக்கு எதிராக ராஜ் தாக்கரே வெளியிட்டுள்ள கருத்து என்பது, இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு எதிராக மிரட்டலாகும். இவ்வாறு மிரட்டல் விடும் ஒரு நபரைச் சமாளிக்க வேண்டிய அனைத்து அரசுகளுக்கும் விடுக்கப்பட்ட சவாலாகும். நாட்டின் எந்தப் பகுதியிலும் வசிக்கவும்,  பணிபுரியவும் மக்களுக்கு உரிமை உண்டு. ராஜ் தாக்கரே போன்ற நபர்களின் நடத்தையைக் கவனத்தில் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய மற்றும் மகாராஷ்டிர மாநில அரசுகளின் கடமை.
இவரைப் போன்ற நபர்களை அடக்க முடியாத போது, பயங்கரவாதத்தை அரசுகள் எவ்வாறு சமாளிக்கப் போகின்றன? பீகாரிகளுக்கு எதிரான வெறுப்பைக் கக்கும் கருத்துகளை வெளியிட்ட ராஜ் தாக்கரே மீது மகாராஷ்டிர அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இதேபோல், பீகாரின் சீதாமாரி மாவட்டத்தைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட நபரான அப்துல் காதர் என்பவரை உள்ளூர் போலீஸாருக்குத் தெரிவிக்காமலேயே மஹாராஷ்டிர மாநில போலீஸார் கைது செய்தனர். இதற்கு பீகார் அரசு எதிர்ப்பு தெரிவித்தபோது, அதை மகாராஷ்டிர அரசு சார்பில் ராஜ் தாக்கரே கண்டித்தார். ஆட்சியை அவரிடம் மஹாராஷ்டிர அரசு குத்தகைக்கு விட்டுள்ளதா? என்று நிதீஷ்குமார் கேள்வி எழுப்பினார்.
ஹிந்தி சேனல்கள் மீது ராஜ் தாக்கரே தாக்கு: இதனிடையே, ராஜ்தாக்கரே மும்பையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஹிந்தி சேனல்கள், எனது கருத்துகளைத் திரித்து வெளியிட்டுள்ளன. பிரச்னைகளைச் சரிவர புரிந்துகொள்ளாமல் அவர்கள் செய்திகளை ஒளிபரப்பக் கூடாது. முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டு அதன்பின் செய்திகளை வெளியிட வேண்டும் என்று அவற்றுக்குக் கூற விரும்புகிறேன். இல்லாவிட்டால் அவற்றை எப்படி நிறுத்துவது என்பது எங்களுக்குத் தெரியும்.
மஹாராஷ்டிரத்தில் குற்றங்களைச் செய்யும் நபர்கள் எல்லாம் பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்குத் தப்பி ஓடுவது ஏன்?  இந்த மாநில அரசுகள் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். இது குறித்து மத்திய அரசும் சிந்திக்க வேண்டும்.
பீகாரில் இருந்து தாக்கரே குடும்பம் மகாராஷ்டிரத்துக்கு குடியேறியதாக திக்விஜய் சிங் தெரிவித்துள்ளது சரியல்ல. வேறு மாநிலங்களில் இருந்து மகாராஷ்டிரத்துக்குள் குடியேறுபவர்கள் தங்களைக் குறித்த விவரங்களைப் பதிவு செய்ய வேண்டியதை மாநில அரசு கட்டாயமாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக