வெள்ளி, செப்டம்பர் 14, 2012

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அறிவிப்போம்- தலைமை நீதிபதி இக்பால் அதிரடி எச்சரிக்கை !

சென்னை: கடலூர் மாவட்ட மாஜிஸ்திரேட் புகழேந்தியை அவரது சேம்பருக்குள் புகுந்து கடுமையாக மிரட்டிய இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அறிவிக்க நேரிடும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் தலைமையிலான முதன்மை பெஞ்ச் இன்று கடும் எச்சரிக்கை விடுத்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் 150வது
ஆண்டு விழாவுக்கு முதல்வர் ஜெயலலிதாவை நேரில் போய் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அழைத்தபோதே கடும் சர்ச்சை எழுந்தது. இதனால் நீதித்துறையில் ஆட்சி அதிகார துஷ்பிரயோகம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று வக்கீல்கள் பலரும் குமுறினர். அதற்கேற்ப அடுத்த சில நாட்களிலேயே கடலூர் மாவட்ட கோர்ட்டில் ஒரு பெரும் சர்ச்சை வெடித்தது.
மாஜிஸ்திரேட் புகழேந்தி என்பவரிடம், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் என்பவர் மிரட்டும் தொணியில் பேசியதால் கடும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வக்கீல்களும், கோர்ட் ஊழியர்களும் இன்ஸ்பெக்டரை சிறை பிடித்தனர். இதையடுத்து மாவட்ட எஸ்.பி.யே நேரில் வந்து அந்த இன்ஸ்பெக்டரை மீட்டுச் சென்றார்.
குற்றவியல் இன்ஸ்பெக்டராக இருப்பவர்தான் இந்த கார்த்திகேயன். இவர் திருட்டுப் போன பொருட்களை மீட்டது தொடர்பாக மாஜிஸ்திரேட் புகழேந்தியிடம் ஒரு விண்ணப்பம் அளித்தார். ஆனால் அது சரியில்லை என்று மாஜிஸ்திரேட் நிராகரித்து விட்டார். இதனால் கோபமடைந்த கார்த்திகேயன் மாஜிஸ்திரேட்டை கடுமையாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால்தான் அவரை வக்கீல்கள் சிறை பிடித்தனர்.
இந்த விவகாரம் பெரிதானதைத் தொடர்ந்து மாவட்ட செஷன்ஸ் நீதிபதி தலையிட்டு வக்கீல்களை அமைதிப்படுத்தினார். அதேசமயம், மாவட்ட மாஜிஸ்திரேட் புகழேந்தி நடந்த விவரங்களை விளக்கிசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பாலுக்கு விரிவான புகார் ஒன்றை அனுப்பினார்.
இதையடுத்து தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று அரசு தலைமை வக்கீல் நவநீதகிருஷ்ணனை அழைத்து இந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டனர்.
அதற்கு நவநீதகிருஷ்ணன், டிஜிபி மற்றும் மாவட்ட எஸ்.பியிடம் பதில் கேட்டு அளிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று அறிவிக்க நேரிடும் என்று நீதிபதிகள் அதிரடியாக அறிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக