புதன், செப்டம்பர் 19, 2012

ஹெல்மந்தில் தாலிபான் தாக்குதல்: பீதி மாறாத நேட்டோ ஆக்கிரமிப்பு ராணுவத்தினர் !

A still from a video showing the attack on Camp Bastion. Picture APகாபூல்:ஆஃப்கானிஸ்தானின் முக்கிய ஆக்கிரமிப்பு நேட்டோ படையின் முக்கிய ராணுவ தளமான பாஸ்டியன் ஹெல்மந்த் மாகாணத்தில் உள்ளது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை தாலிபான் போராளிகள் நடத்திய மின்னல்வேக தாக்குதலால் அமெரிக்கா மற்றும் நேட்டோ ராணுவம் நிலைகுலைந்து போனது. ஆக்கிரமிப்பு ராணுவத்தினருக்கு தாலிபான் நடத்திய தாக்குதல் குறித்த அதிர்ச்சி இன்னமும் மாறவில்லை. கடந்த 11
ஆண்டுகளில் நேட்டோ ராணுவம் சந்தித்துள்ள மிகப்பெரிய பின்னடைவுதான் இத்தாக்குதல் என்று வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது. தாலிபான் போராளிகளின் தாக்குதலில் இரண்டு பிரிட்டீஷ் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். எட்டு போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. பலத்த பாதுகாப்பும், தீவிர ராணுவ கண்காணிப்பும் கொண்ட பாஸ்டியன் ராணுவ தளத்தில் மெயின் கேட்டையும் தாண்டி உள்ளே நுழைந்து 15க்கும் மேற்பட்ட தாலிபான் போராளிகள் தீரமிக்க இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். குறைந்த எண்ணிக்கையிலான தாலிபான் போராளிகள் பலத்த பாதுகாப்பு மிக்க ஒரு ராணுவ தளத்தில் துணிச்சலாக உள்ளே நுழைந்து ஆயுதம் பலம் கொண்ட பெரும் ராணுவப் படையினருடன் 3 மணிநேரம் நீண்ட மோதலில் ஈடுபட்டதை பெண்டகன் அதிர்ச்சியுடன் அவதானித்துள்ளது.
அமெரிக்க ராணுவத்தினரின் வேடத்தில் நேட்டோ ராணுவத் தளத்தில் நுழைந்த போராளிகள் மூன்று எரிபொருள் நிரப்பும் ஸ்டேசன்களையும், ஏராளமான வாகனங்களையும் போர் விமானங்களையும் முற்றிலும் அழித்துள்ளதாக பெண்டகனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நள்ளிரவில் ராணுவ தளத்தில் திடீரென நுழைந்த தாலிபான் போராளிகளின் போராட்ட வீரியத்தின் முன்னால் பதறிப்போன நேட்டோ ராணுவத்தினரால் ஏற்பட்ட இழப்பையும் பெண்டகன் வெளியிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் நடந்த தாக்குதலில் 20 கோடி அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இழப்பு இதைவிட மிக அதிகம் என்று ஆஃப்கானிஸ்தானில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
தாலிபான் வேட்டைக்காக ஆஃப்கானிஸ்தானிற்கு வந்த இளவரசர் ஹாரி, போராளிகளின் தாக்குதலில் இருந்து சில மீட்டர்கள் இடைவெளியில் உயிர் தப்பினார் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
நாட்கள் செல்லச் செல்ல ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு எதிரான தாலிபானின் போராட்டம் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா தானாக முன்வந்து பேச்சுவார்த்தைக்கு வருவதை சிறிதும் மதிக்காத தாலிபான் போராளிகள் பெண்டகனின் அதிகாரிகளுக்கு அபாயத்தின் அறிகுறியை ஹெல்மந்த் மாகாண தாக்குதல் மூலம் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக