புதன், செப்டம்பர் 12, 2012

எங்கள் பிணத்தின் மீதுதான் உதயகுமாரை கைது செய்ய முடியும் : கூடங்குளம் இளைஞர்கள் முழக்கம் !

நெல்லை:அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் எந்த சூழலிலும் சரணடையக் கூடாது என்று முன்னாள் அன்னா ஹஸாரே குழுவைச் சார்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இதேப்போன்று இடிந்தகரை மக்களும் எதிர்ப்பதெரிவித்துள்ளனர்.கூடங்குளத்தில் அமைந்துள்ள அணு உலைகளில் யுரேனியம் நிரப்புவதை நிறுத்தக் கோரி சுற்றுவட்டார மக்கள் அமைதியானமுறையில் நடத்திய போராட்டத்தில் போலீஸார் நடத்திய வன்முறைச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் அன்னா ஹஸாரே குழுவைச் சார்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று இடிந்தகரை கிராமத்திற்கு வருகைத்
தந்தார். இரவு 11 மணி அளவில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் பந்தலுக்கு வந்த அவர் போராட்டத்தை ஆதரித்து அங்கு குழுமியிருந்த மக்களிடையே ஆற்றிய உரையில் கூறியது:
“உங்கள் போராட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு வந்தவுடன் அணு உலையின் அடிப்படை விஷயங்களையும், செயல்பாடுகளையும் தெரிவித்தனர். இது எனக்கு அதிர்ச்சி தரும் வகையில் இருந்தது.
அணுஉலை விபத்து நஷ்டஈடு வழங்குவது குறித்து இந்தியா, ரஷியா இடையே போடப்பட்டுள்ள ஒப்பந்த நகலை போராட்டக் குழுவிடம் அளிக்க வேண்டும். அணு உலை தொடர்பான வரைவுத் திட்டம், சுற்றுச்சூழல் அறிக்கை உள்ளிட்ட இன்னும் பல தகவல்களை அணு உலை நிர்வாகத்திடம் போராட்டக்காரர்கள் கேட்டுள்ளனர். ஆனால் இன்னும் தரவில்லை.
அணு உலையினால் பாதிப்பு ஏற்படும் பகுதியில் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளிக்காமல் இருப்பதைக் கண்டிக்கிறேன். அமைதியாகப் போராடுபவர்களை இப்படி துன்புறுத்தலாமா?
எந்தச் சூழ்நிலையிலும் உதயகுமார் சரணடைய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார் அவர்.
உணர்ச்சிவய​ப்பட்டு உடைந்து அழுத உதயகுமார்
மக்கள் மீதான அடக்குமுறையை நிறுத்தும் பொருட்டு தான் கைதாகப் போவதாக உதயகுமார் அறிவித்ததைத் தொடர்ந்து அவர் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது நீங்கள் வெளிநாட்டிலிருந்து பணம் வாங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் சொல்கிறாரே என்று ஒரு நிரூபர் கேட்டவுடன் உணர்ச்சி வசப்பட்ட உதயகுமார்,  “நான் எந்த வெளிநாட்டிலிருந்தும் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை, என்பதை மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறேன். இந்த மாதா மீது சத்தியமாக சொல்கிறேன் நான் எந்த வெளிநாட்டிலும் ஒரு காசு கூட வாங்கவில்லை” என்று கூறி உணர்ச்சிவயப்பட்டு உடைந்து அழுதார்.
இதைக் கண்டவுடன் அங்கிருந்த ஆயிரக்கணக்கான பெண்களும் உணர்ச்சிவயப்பட்டு கதறி அழத்தொடங்கினர். திடீரென்று ஆத்திரம் கொண்டு எழும்பிய ஒரு இளைஞர்கள் குழு, உதயகுமார், புஷ்பராயன் போன்றோரை அப்படியே தூக்கிச் சென்றது. உதயகுமாரை கைது செய்ய விடமாட்டோம்.  ‘வா, வந்து பார்.  எங்கள் பிணத்தின் மீதுதான் அவரைக் கைது செய்ய முடியும்’ என்று மைக்கில் முழக்கமிட்டபடியே அவரைத் தூக்கிச் சென்றனர் இளைஞர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக