புதன், செப்டம்பர் 05, 2012

மோடியின் வலது கை அமித் ஷா மீது குற்றப்பத்திரிகை !

அஹ்மதாபாத் : குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும் முன்னாள் அமைச்சருமான அமித் ஷா மீது துளசி பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கில் சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது மோடிக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது.இந்தியாவில் நடந்த மோசமான இனக்கலவரங்களில் ஒன்றான குஜராத் கலவரத்தில் சமீபத்தில் மோடியின் நம்பிக்கைகுரிய அமைச்சராக இருந்த மாயா கோத்னானிக்கும் பாபு பஜ்ரங்கிக்கும் 28 ஆண்டுகள் தண்டனை கொடுக்கப்பட்டது நாடெங்கும் பரபரப்பை
ஏற்படுத்தியது.
குஜராத் கலவரத்தின் போது மாயா அமைச்சராக இல்லையென்றாலும் குஜராத் கலவரத்தில் அவரின் பங்களிப்பை பாராட்டியே கலவரத்திற்கு பிறகு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. அச்செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் நீதிமன்றம் மோடி மாயாவை காப்பாற்ற முயற்சி செய்ததாகவும் கூறியது.
மோடியை அடுத்த பிரதமராக முன்னிறுத்த பாஜக முயலும் நேரத்தில் இது மோடிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இன்னும் நெருக்கடியை அதிகரிக்கும் விதமாக துளசி பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கில் குற்றச் சதியில் ஈடுபட்டதாகவும் ஆதாரங்களை அழிக்க முயன்றதாகவும் மோடியின் வலது கையாக கருதப்படும் முன்னாள் அமைச்சர் அமித் ஷா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
அமித் ஷாவுடன் முன்னாள் குஜராத் காவல்துறை தலைவர் பி.சி.பாண்டே, ஐபிஎஸ் அதிகாரிகள்  மாத்தூர், டி.ஜி.வன்ஜரா, கீதா ஜொஹ்ரி மற்றும் துணை சூப்பிரடண்ட படேல் ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குஜராத் காவல்துறையால் போலி எண்கவுண்டரில் கொல்லப்பட்ட சொஹ்ராபுதீன் ஷேக் வழக்கில் காவல்துறைக்கு எதிராக சாட்சி சொன்னவர் பிரஜாபதி என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக