மதுரை: தமிழ்நாட்டை உலுக்கிய கிரானைட் கொள்ளையில் தொடர்புடையோரை பிடிக்கின்ற வேட்டை தீவிரமடைந்திருக்கிறது. இன்று அதிகாலை முதல் ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் 34 இடங்களில் கிரானைட் கொள்ளை தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.இது தொடர்பாக காவல்துறையினர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:இரண்டு வழக்குகள் பதிவு மதுரை மாவட்டத்தில்
கடந்த சில வருடங்களாக கிராணைட் குவாரிகளில் மிக அதிக அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையால் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை மதுரை பிரிவு இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது
இரு வழக்குகளில் சிக்கிய அரசு அதிகாரிகள்
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் என். மதிவாணன் ஐஏஎஸ், இயக்குநர், சர்க்கரைத் துறை, சென்னை (முன்னாள் மாவட்ட ஆட்சியர், மதுரை), ராஜாராம், துணை இயக்குநர், சுரங்கங்கள், நாகர்கோவில் (முன்னாள் துணை இயக்குநர், சுரங்கங்கள், மதுரை) பி, பெரியசாமி, வணிக வரி அலுவலர் (ஓய்வு), மேலூர், கணேசன், கண்காணிப்பாளர், மத்திய கலால் துறை மற்றும் பி.பழனிசாமி, மேனேஜிங் பார்ட்னர், பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் லிமிட்டெட் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பி.ஆர்.பிக்கு சாதகமாக செயல்பட்ட கதை
மேற்கண்ட அனைவரும் மதுரை மாவட்டத்தில் பணிபுரிந்தபோது அவர்கள் தங்கள் பதவியை பயன்படுத்தி பி,ஆர்,பி கிராணைட் மற்றும் ஏற்றுமதி நிறுவனத்திற்கு உடந்தையாக இருந்து போலியான ஆவணங்கள் தயாரித்தும், சட்டவிரோதமாக மேற்படி குவாரிகள் செயல்படவும் ஒத்துழைத்து அதன் பேரில் ஆதாயம் அடைந்துள்ளனர், மேலும் மதிவாணன், ஐஏஎஸ் பி.ஆர்.பி. நிறுவனத்திற்கு உண்டான குவாரிகளில் சட்டத்திற்கு புறம்பாக குவாரிகள் தோண்டப்படவில்லை என்று உண்மைக்கு புறம்பாக அறிக்கையை தனக்கு ஆதாயம் ஏற்படும் விதத்தில் அரசிற்கு தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் அரசுக்கு பலகோடி ரூபாய்க்கு நஷ்டம் ஏற்படுத்தியும், பி.ஆர்.பி. நிறுவனத்திற்கு பலகோடி ரூபாய்க்கு வருமானமும் ஏற்படுத்தியுள்ளார்.
கால்வாய், நீர்வழிப்பாதைகளை தாரைவார்த்தோர்
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், சி.காமராஜ், ஐஏஎஸ், நிர்வாக இயக்குநர், தமிழக உப்பு வாரியம் , சென்னை (முன்னாள் மாவட்ட ஆட்சியர், மதுரை), திரு.ராஜாராம், துணை இயக்குநர், சுரங்கங்கள், நாகர்கோவில் (முன்னாள் துணை இயக்குநர், சுரங்கங்கள், மதுரை), வி. சுப்பு, சிறப்பு துணை ஆட்சியர், சமூகப் பாதுகாப்பு திட்டம், சிவகங்கை மாவட்டம், (முன்னாள் வட்டாச்சியர், மேலூர் தாலுக்கா), ஆர். இராமச்சந்திரன், செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை, கீழ் வைகை பாசனப் பகுதி, பரமகுடி, இராமநாதபுரம் மாவட்டம் (முன்னாள் உதவி செயற் பொறியாளர், பொதுப்பணித்துறை, மேலூர் உதவி கோட்டம்- 4, பெரியார் மெயின் சேனல், மதுரை) மற்றும் தனியார் குவாரி ஆப்ரேட்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட அனைவரும் மதுரை மாவட்டத்தில் பணிபுரிந்தபோது அவர்கள் தங்கள் பதவியை பயன்படுத்தி அரசிற்கு சொந்தமான கால்வாய்களிலும், நீர்வழிப் பாதைகளிலும், குவாரிகள் செயல்பட ஒத்துழைத்தும், போலியான ஆவணங்கள் தயாரித்தும், சட்டவிரோதமாக குவாரிகள் செயல்படவும் ஒத்துழைத்து அதன் பேரில் ஆதாயம் அடைந்துள்ளனர்,
கலெக்டர் காமராஜ்
மேலும் காமராஜ், முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர், அரசிற்கு சொந்தமாக கண்மாய்களிலும், குளங்களிலும் சட்டவிரோதமாக குவாரிகள் தோண்டப்படவில்லை என்று அரசிற்கு பொய்யான அறிக்கை தாக்கல் செய்துள்ளார், இதன் மூலம் அரசிற்கு பலகோடி ரூபாய்க்கு நஷ்டம் ஏற்படுத்தியும்; சட்டவிரோதமாக குவாரி நடத்துபவர்களுக்கு பலகோடி ரூபாய்க்கு வருமானமும் ஏற்படுத்தியுள்ளார்.
இதனால் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகளால் முதல்கட்டமாக மேற்படி வழக்கு சம்பந்தமாக மதுரை, சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் 34 இடங்களில் இன்று சோதனை நடைபெறுகின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக