செவ்வாய், ஜூன் 19, 2012

அப்துல் கலாம் போட்டி இல்லை: சிக்கலில் திரிணாமுல், என்.டி.ஏ !

MAMATA20120618125756_lபுதுடெல்லி:பா.ஜ.கவையும், திரிணாமுல் காங்கிரஸையும் சிக்கலில் மாட்டவைத்து முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். போட்டியிட வலுவான நபர் இல்லாததால் பா.ஜ.க நெருக்கடியில் ஆழ்ந்துள்ள நிலையில், அப்துல் கலாமைத் தவிர வேறு எவரையும் ஆதரிக்கமாட்டோம் என்று கூறிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா
பானர்ஜி திரிசங்கு நிலையில் உள்ளார்.
அப்துல் கலாம் பெயரை மம்தா முன்வைத்த பிறகு, ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடன் அவர் முரண்பட்டார். மேலும், பாரதிய ஜனதா கட்சியும் பிரணாப் முகர்ஜிக்கு எதிரான எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக அப்துல் கலாமை நிறுத்த பெரும் முயற்சி எடுத்துக்கொண்டது. இதற்காக, அப்துல் கலாமை 3 முறை எல்.கே. அத்வானி தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவரை சம்மதிக்க வைக்க 2 முறை தனது நெருங்கிய உதவியாளர் சுதீந்திர குர்கர்னியை கலாம் இல்லத்துக்கு அனுப்பிவைத்தார்.
இருந்தபோதிலும், குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தனது ‘மனசாட்சி’ இடம் கொடுக்கவில்லை என கலாம் தெரிவித்துவிட்டதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. திட்டவட்டமாக வெற்றிபெறுவோம் என்பது உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே தன்னால் போட்டியிட முடியும் என அப்துல் கலாம் வலியுறுத்தி வந்தார். அப்துல் கலாமின் திட்டம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள ஞாயிற்றுக்கிழமை பல எதிர்க்கட்சித் தலைவர்கள் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டனர்.
இந்நிலையில் அப்துல் கலாம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’நாட்டில் நிலவும் இப்போதைய அரசியல் நிலவரம், குடியரசுத் தலைவர் தேர்தலின் ஒட்டுமொத்தத் தன்மை ஆகியவற்றைப் பரிசீலித்து நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.
இன்னொரு முறை குடியரசுத் தலைவர் ஆக வேண்டும் என்று நான் விரும்பாவிட்டாலும்; குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என நான் ஆசைப்படாவிட்டாலும், மம்தா பானர்ஜி உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் என்னை வேட்பாளராக்க விரும்பினர். இந்திய மக்களும் அவ்வாறே விரும்பினர். இது என் மீதான அவர்களின் அன்பையும் பற்றையும் காட்டுவதாக உள்ளது. இந்த ஆதரவின் மூலம் நான் நெகிழ்ந்துபோனேன்.
அவர்களது விருப்பத்தை நான் மதிக்கிறேன். அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இப்போதைய அரசியல் நிலவரம், குடியரசுத் தலைவர் தேர்தலின் ஒட்டுமொத்தத் தன்மை ஆகியவற்றை நான் பரிசீலித்துப் பார்த்தேன். அதன் பிறகு 2012 குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முடிவெடுத்தேன்.’  என்று தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை என அப்துல் கலாம் அறிவித்துவிட்ட நிலையில், ஒரு திட்டவட்டமான முடிவினை எடுக்க வேண்டிய நிலைக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தள்ளப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து அப்துல் கலாம் விலகிவிட்டார் என இப்போதுதான் கேள்விப்பட்டோம். இது தொடர்பாக மம்தா ஒரு முடிவெடுப்பார். அவர் எடுக்கும் முடிவு ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும் என திரிணமூல் காங்கிரஸின் மாநிலங்களவை உறுப்பினர் குணால் கோஷ் தெரிவித்தார்
அப்துல் கலாம் போட்டியிடவில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ள சூழலில் அ.இ.அ.தி.மு.கவும், பி.ஜே.டியும் ஆதரவு தெரிவித்துள்ள முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.ஏ.சங்க்மாவை ஆதரிப்பதே என்.டி.ஏ முன்னால் இருக்கும் ஒரே வழியாகும். குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றிப்பெற வாய்ப்பு இல்லை எனினும், வருகிற மக்களவை தேர்தலில் ஜெயலலிதாவையும், நவீன் பட்நாயக்கையும் என்.டி.ஏ கூட்டணிக்குள் இழுக்க இது ஒரு வாய்ப்பாக அமையும் என அவர்கள் கருதுகின்றனர்.
சங்க்மா, தான் ஒரு பழங்குடி இன மக்கள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் என சுயமாக அறிவித்துள்ள சூழலில், பழங்குடி இன மக்களின் வாக்குகளையும் கவரலாம் என என்.டி.ஏ கருதுகிறது.
இந்நிலையில் பா.ஜ.க எம்.பியான மேனகா காந்தி, குடியரசு தலைவர் வேட்பாளர் விவகாரத்தில் கட்சியுடன் கருத்து முரண்பாடு கொண்டுள்ளார். நேற்று பிரணாப் முகர்ஜியை அவரது இல்லத்திலும் சந்தித்து மேனகா காந்தி வாழ்த்துத் தெரிவித்தார்.
இச்சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய மேனகா, ‘ஜனாதிபதி பதவிக்கு மிகச் சரியானவர் பிரணாப் முகர்ஜி தான். அவர் தான் அடுத்த ஜனாதிபதியாக வேண்டும். பிரணாப் முகர்ஜியை ஒருமனதாக அனைவரும் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்றார்.
ஏற்கனவே பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்திருந்த அவர், அதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அவரை நேற்று நேரிலும் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
இதன்மூலம் ஜனாதிபதி வேட்பாளர் விஷயத்தில் பாஜகவிலேயே குழப்பம் ஏற்பட்டுள்ளது தெளிவாகிறது. தனது கட்சி இன்னும் ஆலோசனைகளிலேயே இருக்கும் நிலையில் காங்கிரஸ் வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை ஆதரித்துள்ளார் மேனகா காந்தி. இது பாஜக தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இதனிடையே, அப்துல் கலாமின் முடிவு சரியானது என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. பிரணாப் முகர்ஜியை மமதா பானர்ஜி ஆதரிப்பார் என்று நம்புவதாகவும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக