பெங்களூர்:ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு கர்நாடகா பா.ஜ.க தலைமையில் அதிகார போட்டி தீவிரமடைந்துள்ளது. முதல்வர் பதவிக்காக பா.ஜ.கவின் கர்நாடகா மாநில தலைவர் எஸ்.ஈஸ்வரப்பா காய்களை நகர்த்த துவங்கியுள்ளது பா.ஜ.க மேலிடத்தை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. முதல்வர் பதவிக்கான விருப்பத்தை எஸ்.ஈஸ்வரப்பா நேற்று
வெளிப்படையாகவே தெரிவித்தார். சில எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் தன்னிடம் அன்பாக முதல்வர் பதவியை ஏற்பதற்கு கோரிக்கை விடுத்தனர். நான் எதுவும் தெரிவிக்கவில்லை. முதல்வர் பதவிக்கான போட்டியில் நான் உள்ளேன். தலைமையில் மாற்றம் வேண்டும் என்பது எம்.எல்.ஏக்களின் அவசியமாகும். இதுத் தொடர்பாக மேலிடத்தின் முடிவை காத்திருக்கிறேன் என்று ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
‘முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாரா?’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், ‘சிறந்ததொரு வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் பயன்படுத்த மாட்டீர்களா?’ என ஈஸ்வரப்பா கூறினார்.
புதிய சூழலில் கட்சியில் பிரச்சனைகளை குறித்து விவாதிக்க பா.ஜ.கவின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டவேண்டும் என்று எடியூரப்பாவை ஆதரிக்கும் அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், பா.ஜ.க மேலிடத்தின் அனுமதியோடு மட்டுமே கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும் என்ற நிலைப்பாட்டில் முதல்வர் சதானந்தா கவுடா உள்ளார்.
அதேவேளையில் முதல்வர் பதவிக்காக காய்களை நகர்த்தும் ஈஸ்வரப்பாவிற்கு எடியூரப்பா ஆதரவாளர்களின் ஆதரவு கிடைக்க வாய்ப்பில்லை. கிராம வளர்ச்சித்துறை அமைச்சர் ஜகதீஷ் ஷெட்டாரை முதல்வர் ஆக்கவேண்டும் என்பதே எடியூரப்பா ஆதரவாளர்களின் கோரிக்கையாகும்.
சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்ட எடியூரப்பா ஆதரவு அமைச்சர்கள் ராஜினாமா மிரட்டலை விடுப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
பிற்படுத்தப்பட்ட சமுதாயமான குரும்பா பிரிவைச் சார்ந்த ஈஸ்வரப்பாவை முதல்வராக்குவதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் இப்பிரிவினரின் ஆதரவை பெறலாம் என பா.ஜ.க மேலிடம் கணக்கு போடுகிறது.
பிரச்சனைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடகா மாநிலத்தில் முதல்வரை மாற்றுவது உறுதியாகியுள்ளது. கட்சியின் கர்நாடகா மாநில பொறுப்பாளரான தர்மேந்திரா ப்ரதான், அமைப்பு விவகார செயலாளர் சதீஷ் ஆகியோர் நாளை பெங்களூருக்கு வருகை தருகின்றனர்.
எடியூரப்பா, சதானந்த கவுடா, ஈஸ்வரப்பா மற்றும் மூத்த அமைச்சர்களுடன் இருவரும் விவாதிப்பார்கள். பேச்சுவார்த்தைக்கு பிறகு இருவரும் பா.ஜ.க தேசிய தலைவர் நிதின் கட்கரிக்கு அளிக்கும் அறிக்கையைப் பொறுத்து முதல்வரை மாற்றுவதுக் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக